2015-03-18 14:58:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி - குடும்பத்தில் குழந்தைகள்


மார்ச் 18,2015. கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வி உரையில் குடும்பம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், குடும்பத்தில் குழந்தைகளின் இடம் குறித்து எடுத்துரைத்தார்.

கடந்த சில வாரங்களாக குடும்பம் எனும் தலைப்பில் தாய். தந்தை, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் தாத்தா, பாட்டிகள் குறித்து நோக்கியுள்ள நாம், இன்று குழந்தைகள் குறித்து நோக்கி குடும்பம் குறித்த இந்தத் தொடரை நிறைவு செய்வோம்  என தன் மறைக்கல்வி உரையை துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். குழந்தைகள் என்பவர்கள், திருஅவைக்கும் மனிதகுல குடும்பத்திற்கும் ஒரு பெரும் கொடையாக உள்ளனர். நான் என் அண்மை ஆசியத் திருப்பயணத்தின்போது சந்தித்த மகிழ்ச்சிநிறை குழந்தைகள் குறித்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறும் எண்ணற்ற குழந்தைகள் குறித்தும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன். ஒரு சமூகம் தன் குழந்தைகளை நடத்தும் விதத்தை வைத்து அச்சமூகத்தை நாம் மதிப்பிடமுடியும். நம்முடைய துவக்க காலத்திலிருந்தே நாம் ஒவ்வொருவரும் குடும்பத்திற்குள் ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை நம் குழந்தைகள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். இந்தக் கூற்று, பெத்லகேமில் குழந்தையாகப் பிறந்த இயேசுவிலும் உண்மையாவதை நாம் காண்கிறோம். நாம் நம் வாழ்வு மீது முழு அதிகாரம் உடையவர்களாக அல்ல, மாறாக, மற்றவர்கள் மீது சார்ந்து வாழவேண்டியவர்களாக, அதாவது ஒரு மகனாக, மகளாகவே எப்போதும் உள்ளோம் என்பதை குழந்தைகள் நமக்கு நினைவூட்டி நிற்கின்றார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் இந்த உலகின் சூழல்களுக்குப் பதில் வழங்கவேண்டிய நாம்,  சிரிக்கவும், சுதந்திரமாக அழவும், அன்பையும் இதமான வருடலையும் பெறவும், வழங்கவும் தேவையான எளிமை நிறைந்த, தூய்மையான, அதேவேளை பிறரில் நம்பிக்கை கொள்ளும் இதயத்தைக் கொண்டிருக்க குழந்தைகள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். குழந்தைகள்போல் நாமும் மாறவேண்டும் என்று இயேசு விரும்புகிறார், ஏனெனில் இறையரசு அவர்களுக்குரியதே(மத்.18:3). இவ்வுலகிற்கு மகிழ்ச்சியையும் வாழ்வையும் நம்பிக்கையையும் கொணரும் குழந்தைகளை வரவேற்று, அவர்களை பெரும் புதையல்போல் பாதுகாப்போம். குழந்தைகள் இல்லையென்றால் நம் இந்த உலகம் எவ்வளவு சோகமானதாக, அர்த்தமற்றதாக, வெறுமையானதாக இருக்கும் என்பதையும் எண்ணிப் பார்ப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.