2015-03-18 15:25:00

அமைதி ஆர்வலர்கள் – 1976ம் ஆண்டின் நொபெல் விருது - பாகம் 1


மார்ச்,18,2015. அயர்லாந்து நாட்டவர்களான Betty Williams, Mairead Corrigan Maguire ஆகிய இரு அமைதி ஆர்வலர்களும் 1976ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டனர். 1976ம் ஆண்டில் இவ்விருதுக்கென பெயர்களைத் தேர்வு செய்த நடைமுறையில், ஆல்பிரட் நொபெல் அவர்களின் உயிலின் கூறுகளை முழுவதும் நிறைவேற்றியவர்களாக, அவ்வாண்டுக்கென பரிந்துரைக்கப்பட்ட அமைதிப்பணி ஆர்வலர்களில் எவரும் இல்லை. இம்மாதிரியான சூழலில் அவ்விருது அந்த ஆண்டில் வழங்கப்படாமல் அதற்கு அடுத்த ஆண்டிலே வழங்கப்படும். ஆதலால் Betty Williams, Mairead Corrigan Maguire ஆகிய இருவரும் 1976ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை 1977ம் ஆண்டிலே பெற்றனர்.

வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி Betty Williams அவர்கள் தனது மகள் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தத்தைக் கேட்டார். இவர் தனது வீட்டின் மூலையில் காரை நிறுத்திவிட்டு பார்த்தபோது, Maguire குடும்பத்தின் மூன்று சிறாருக்கு உதவி தேவைப்பட்டது தெரிந்தது. IRA என்ற அயர்லாந்து புரட்சிப் படையைச் சேர்ந்த Danny Lennon என்பவர் ஓட்டிச் சென்ற காரில் இந்த மூன்று சிறாரும் அடிபட்டு இறந்தனர். இவர்களின் தாய் Anne Maguire பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு வில்லியம்சை மிகவும் பாதித்தது. இச்சிறார் விபத்தால் கொலை செய்யப்பட்ட இரு நாள்களுக்குள் வட அயர்லாந்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றில் ஆறாயிரம் பேரின் கையெழுத்தைப் பெற்றார் வில்லியம்ஸ். இது ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. Ciaran McKeown என்பவருடன் சேர்ந்து மகளிர் அமைதி இயக்கம் என்ற ஓர் அமைப்பையும் ஆரம்பித்தார் பெட்டி வில்லியம்ஸ். இந்த அமைப்பு பின்னாளில் அமைதி மக்கள் சமூகமாக மாறியது.

கொலை செய்யப்பட்ட அந்த மூன்று சிறாரின் கல்லறைகளுக்கு வில்லியம்ஸ் விரைவில் ஓர் அமைதி பேரணியை நடத்திச் சென்றார். இதில் கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர் என ஏறக்குறைய பத்தாயிரம் பேர் பங்கு பெற்றனர். எனினும் இந்த அமைதிப் பேரணி அயர்லாந்து புரட்சிப் படையின் வன்முறையால் கலைக்கப்பட்டது. வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சிக்கு இப்பேரணியினர் ஆதரவு அளிக்கின்றார்கள் என்று அப்படையினர் குறை கூறினர். ஏனெனில் இந்தப் புரட்சிப்படை வடஅயர்லாந்தில் பிரித்தானியாவின் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வந்தது. IRA என்ற அயர்லாந்து புரட்சிப்படை, 1913ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி அயர்லாந்து தன்னார்வத் தொண்டர்களால் உருவான ஓர் இராணுவ அமைப்பாகும். இந்தப் பேரணி நடந்த அடுத்த வாரத்தில் ஏறக்குறைய 35 ஆயிரம் பேருடன் மற்றோர் அமைதிப் பேரணியை அந்த மூன்று சிறாரின் கல்லறைகளுக்கு நடத்திச் சென்றார் வில்லியம்ஸ். அந்நேரத்தில் வில்லியம்ஸ் ஓர் அமைதி அறிக்கையையும் வெளியிட்டார்.

இந்த அமைதி இயக்கத்தின் மூலம் உலகுக்கு ஓர் எளிய செய்தியை நாங்கள் வைத்திருக்கின்றோம். நாங்கள் நீதியும் அமைதியுமான சமுதாயத்தில் வாழவும், அதை அன்பு செய்யவும் அதைக் கட்டியெழுப்பவும் விரும்புகிறோம். எங்கள் குழந்தைகளும் நாங்களும் வீட்டிலும், வேலைசெய்யும் இடத்திலும், விளையாடும் இடத்திலும் மகிழ்வாகவும் அமைதியாகவும் வாழ விரும்புகிறோம். இத்தகைய சமுதாயத்தை அமைப்பதற்கு அர்ப்பணிப்பு, கடினவேலை மற்றும் துணிச்சல் அவசியம். நம் சமுதாயத்தில் சண்டை மற்றும் வன்முறையால் நிறைய பிரச்சனைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிகிறோம். ஒவ்வொரு குண்டு வெடிக்கும்போதும், ஒவ்வொரு துப்பாக்கிச் சப்தம் கேட்கும்போதும் அமைதிப்பணி இன்னும் கடினமாக்கப்படுகின்றது. வன்முறையின் அனைத்து வடிவங்களையும் நாங்கள் புறக்கணிக்கிறோம். எம் அருகில் இருப்பவர்கள், தொலைவில் இருப்பவர்கள் எல்லாருடனும் இணைந்து அமைதியான சமூகத்தை அமைக்க எங்களை அர்ப்பணிக்கின்றோம்.

இவ்வாறு அமைதி அறிக்கையை அப்பேரணியின் இறுதியில் வாசித்தார் பெட்டி வில்லியம்ஸ். 1943ம் ஆண்டு மே 22ம் தேதி வட அயர்லாந்தின் பெல்பாஸ்டில் பிறந்தவர் பெட்டி வில்லியம்ஸ். இவரது தந்தை பிரிந்த கிறிஸ்தவ சபையையும் தாய் கத்தோலிக்கத்தையும் சேர்ந்தவர்கள். வட அயர்லாந்தில் இப்படி அமைவது அபூர்வம். ஏனெனில் இவ்விரு சபை மக்களுக்கிடையே சண்டை இடம்பெற்று வந்தது. தனது குடும்பத்தினரிடமிருந்து சமய சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டார் வில்லியம்ஸ்.  1970களின் தொடக்கத்தில் பிரிந்த கிறிஸ்தவ சபை போதகர் ஒருவர் நடத்திய வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார் இவர். இதுவே அமைதி இயக்கத்தை ஆரம்பிக்க இவருக்கு உதவியது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த பெட்டி வில்லியம்ஸ் அவர்கள், தற்போது அயர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் உலகச் சிறார் அமைப்புக்கும், அனைத்துலக சிறார் உலக கருணை மையத்துக்கும் தலைவராக இருந்து வருகிறார். வாஷிங்டனில் ஆசிய மக்களாட்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றும் இவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றி வருகிறார். 2000மாம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் நொபெல் விருது ஆர்வலர்கள் மாநாட்டை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவர். 2006ம் ஆண்டில் நொபெல் விருது மகளிர் ஆர்வலர்கள் அமைப்பையும் பெட்டி வில்லியம்ஸ் தோற்றுவித்தார். Betty Williams, Mairead Corrigan Maguire, Shirin Ebadi, Wangari Maathai, Jody Williams, Rigoberta Menchu Tum இந்த ஆறு நொபெல் அமைதி மகளிர் ஆர்வலர்கள் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளில் நீதியும் சமத்துவமும் நிறைந்த சமுதாயத்தை அமைப்பதற்குத் தங்கள் அனுபவங்களால் உதவி வருகின்றனர்.

“தீர்வுகள் பற்றிப் பேசாமல் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதால் பயன் இல்லை. ஆண்கள் புரிந்துகொள்வதற்கு உதவுவதற்குப் பெண்கள் சக்தியைக் கொண்டிருக்கின்றனர்.  பெண்கள் வாழ்வை வழங்குபவர்கள், அவர்கள் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும். தினமும் நாற்பதாயிரம் சிறார் வீதம் இறக்கின்றனர், ஓராண்டில் ஒரு கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் இறக்கின்றனர் இதுதான் இன்றைய உலகின் எதார்த்த நிலை”. இவ்வாறெல்லாம் கூறியவர் பெட்டி வில்லியம்ஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.