2015-03-17 16:09:00

பேரிடர்கள் குறித்த தகவல்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும்


மார்ச்,17,2015. ஜப்பானின் சென்டைய் நகரில் நடைபெற்றுவரும், 3வது இயற்கைப் பேரிடர் ஆபத்து குறைப்பு உலக மாநாட்டில் பேசிய தென் பசிபிக் பகுதி தலைவர்கள், அசாதாரண வெப்பநிலை மாற்றங்களை சந்திக்கும் தீவு நாடுகளுக்கு பன்னாட்டு உதவி உறுதிப்படுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டனர்.

பேரிடர்கள் நேரிடும்போது, அவற்றிலிருந்து அதிகமான உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில் மக்களுக்கு அவை குறித்த நடைமுறை தகவல்கள் விரைவாக வழங்கப்பட வேண்டுமென்றும் இம்மாநாட்டில் கூறப்பட்டது.

ஆபத்தை எதிர்நோக்கும் மக்களும் அறிவிப்புகளுக்கு உடனடியாகச் செவிமடுத்து செயல்படவில்லையெனில், எவ்வளவு நவீனப் பேரிடர் தடுப்பு அமைப்புகள் இருந்தாலும் அவற்றால் பலனில்லை என்று, யுனெஸ்கோவின் பெருங்கடல் குழுவின் திட்ட செயலர் Vladimir Ryabinin கூறினார்.  

இதற்கிடையே, கடுமையான வெப்பநிலை மாற்றங்களால் Kiribati, Tuvalu மற்றும் Solomon தீவுகளும் அதிகமாக ஆபத்துக்களை எதிர்கொள்கின்றன என்று, ஐ.நா.வுக்கான Tuvalu தீவு தூதர் Aunese Makoi Simati செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

3வது இயற்கைப் பேரிடர் ஆபத்து குறைப்பு உலக மாநாடு இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.