2015-03-17 15:59:00

பெண்களின் தனிப்பட்ட கொடைகள் பாராட்டப்பட வேண்டும்


மார்ச்,17,2015. ஆண்களுக்கு இல்லாத தனிப்பட்ட கொடைகளைப் பெற்றிருக்கும் பெண்களின் ஒருங்கிணைந்த ஆளுமை பாராட்டப்பட வேண்டும் என்று ஐ.நா. கூட்டமொன்றில் கூறினார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.

தாய்மைப்பேறு அடையும் திறன் கொண்ட பெண்கள், பிள்ளைகளைப் பெற்றெடுப்பவர்களாக மட்டும் நோக்கப்படாமல், அவர்களின் இத்திறன் ஓர் ஆன்மீக, கல்வி மற்றும் வாழ்வுக் கலாச்சாரத்தை வழங்கி, அதைப் பேணிப் பாதுகாக்கும் சக்தி படைத்ததாக வாழ்த்தப்பட வேண்டும் என்று கூறினார் பேராயர் Bernardito Auza.

“பெண்களின் சமத்துவம் மற்றும் மனித உரிமைகளைப் பேணும் செயலூக்கியாக குடும்பம்:பெய்ஜிங் மாநாட்டின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் ஐ.நா.வில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Bernardito Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.

தாய்மையின் தனித்துவமிக்க மாண்பும், மதிப்பும் சில சமூகங்களில் போதுமான அளவு பாதுகாக்கப்படாத காலத்தில் நாம் வாழ்ந்து வருவதால், பெண்களின் ஒருங்கிணைந்த ஒரு சூழலைப் பேணி வளர்ப்பது மிகவும் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்றும் பேராயர் Auza அவர்கள் வலியுறுத்தினார்.

அறிவுசார்ந்த மற்றும் தொழில் சார்ந்த வளர்ச்சிகளில், பெண்கள், மனைவிகளாகவும் தாயமார்களாகவும் தங்களின் வளர்ச்சியை கலாச்சார மற்றும் சட்ட அடிப்படையில் நிலைநாட்டவேண்டிய அவசியம் உள்ளது, எனவே இவர்களின் தனிப்பட்ட கொடைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வில் கூறினார் பேராயர் Auza

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.