2015-03-17 15:59:00

பாகிஸ்தானில் ஒரே நாளில் 12 பேருக்கு மரண தண்டனை


மார்ச்,17,2015. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல. ஆனால் தாக்கும் விதங்களும் வேகமும்தான் மாறி வருகின்றன. மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்கும்போது காவல்துறையோ, அரசு நிர்வாகமோ தடுப்பதோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோ கிடையாது என்று ஊடகங்கள் கணித்துள்ளன.  

தாக்கப்பட்டவர்களுக்கு உதவி, நிவாரணம் ஏதும் அளிக்கப்படுவதில்லை. தாக்குதல்கள் நடத்தியவர்களையும் சிறைப்பிடித்து நீதி விசாரணைக்கு உட்படுத்துவதில்லை பாகிஸ்தான் அரசு என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதல்கள் பன்னாட்டு கவனத்தை ஈர்க்கும் சமயங்களில் மட்டும் அரசு பெயரளவுக்குச் சில நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் கூறப்படுகின்றது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கிறிஸ்தவர்களும் சிந்து மாநிலத்தில் இந்துக்களும் ஆங்காங்கே மிகக் குறைந்த எண்ணிக்கையில் பிரிந்து வாழ்கின்றனர்.

மேலும், பாகிஸ்தானில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு நாடெங்கிலும் உள்ள சிறைகளில் இச்செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை நடவடிக்கைகள் கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நாள் இதுவேயாகும்.

தலிபான்களால் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, ஏறக்குறைய 150 பள்ளிச்சிறார் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றுவதை பாகிஸ்தான் மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, இதுவரை 40 பேருக்கு அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.