2015-03-17 15:04:00

நைஜீரிய மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு - திருத்தந்தை கடிதம்


மார்ச்,17,2015. இன, சமூக மற்றும் மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தின் புதிய வடிவ வன்முறைகளால் துன்புறும் நைஜீரிய மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவினரின் வன்முறைகளால் துன்புறும்வேளை அந்நாட்டு ஆயர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதிக்கான பணியில் சோர்வடையாமல் உறுதியுடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவருடன் தோழமை உணர்வு கொண்டு, ஏழைகளுக்கு உதவி, இளையோருக்கு அறிவு புகட்டி, நீதியும், உடன்பிறப்பு உணர்வும் மிக்க சமுதாயத்தை ஊக்குவிப்பவர்களாக ஆயர்கள் விளங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் திருத்தந்தை.

கடும் துன்பச் சூழலிலும் தங்களின் மக்களைக் கைவிட்டு விடாமல் அங்கேயே தங்கியிருந்து பணியாற்றும் மறைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, உண்மைக்காக ஆற்றும் பணியில் சோர்வுறாமல் தொடர்ந்து செயல்படுமாறும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

தங்களை சமய உணர்வு கொண்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு, தங்களின்  ஆதாயங்களுக்காக மதக்கொள்கைகளை மீறுகின்றவர்களால் பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு அனைத்து நைஜீரியர்களுக்கும் மனமாற்றம், ஒப்புரவு மற்றும் அமைதியை வழங்கட்டும் தான் செபிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

16 கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டு, ஆப்ரிக்காவின் பேராற்றல் என நோக்கப்படும் நைஜீரியா, ஆப்ரிக்காவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பொருளாதாரத்தில் வளர்ந்து உலகச் சந்தையை கவர்ந்து வருகிறது மற்றும் ஆப்ரிக்காவில் ஒரே பெரிய பொருளாதார நாடாக உள்ளது என்று அந்நாட்டின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.