2015-03-17 14:54:00

கருணையுடன் இருங்கள், உங்கள் இதயக் கதவுகளை அடைக்காதீர்கள்


மார்ச்,17,2015. ஆலயம், அனைவரையும் வரவேற்கும் கருணையின் இல்லம், அது இயேசுவின் இல்லம் என்பதால் அதில் நுழையத் தேடும் மக்களுக்கு கிறிஸ்தவர்கள்   கதவுகளை மூடும் இடமாக அது இருக்கக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தம்மைத் தேடும் எவருக்கும், குறிப்பாக, தம்மைவிட்டுத் தொலைவில் இருப்பவர்க்கு இயேசு கதவுகளைத் திறந்து வைக்கிறார் என்று கடந்த காலத்தில் பலமுறை கூறியதையே இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியிலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தம்மில் நம்பிக்கை வைப்பதாக அறிக்கையிட்டவர்கள், ஏன், சிலவேளைகளில் பிறருக்குக் கதவுகளை மூடி தம்மீது நம்பிக்கை வைக்கத் தவறியவர்கள் என எல்லாருக்கும் கிறிஸ்து தமது கருணையை முழுமையாக வழங்கும்வேளை, ஆலயத்தின் கதவுகளைத் தட்டுபவர்களுக்கு சில கிறிஸ்தவர்கள் கதவுகளை அடைத்து விடுகின்றனர் என்று கவலையோடு கூறினார் திருத்தந்தை.

கோவிலின் வாயிற்படியிலிருந்து தண்ணீர் வருவது பற்றிக் கூறும், எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய திருப்பலி முதல் வாசகத்தை(எசே.47,1-9,12) மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, தண்ணீர் குணமளிக்கும் தன்மை கொண்டது என்று சொல்லி தண்ணீர் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

வாழ்வில் பல தவறுகள் இழைத்து மனத்தளவில் நோயாய் இருப்பதாக உணரும் ஒரு மனிதர், ஒரு கட்டத்தில், தண்ணீர் அதாவது தூய ஆவி அவரில் செயல்பட்டு ஏதோ ஒரு சொல்லைக் கேட்டு ஆலயத்துக்குச் செல்லத் துணிந்து சென்றால் அங்கு ஆலயக் கதவுகள் மூடியிருப்பதைக் காண்கிறார் என்று கவலையுடன் கூறிய திருத்தந்தை, ஆலயம் இயேசுவின் வீடு, இயேசு எல்லாரையும் வரவேற்கிறார் என்றும் கூறினார்.

கிறிஸ்துவைத் தேடுவோரைத் தடை செய்ய வேண்டாமெனவும் கேட்டுக்கொண்ட   திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்டம் என்பது கடவுளையும், நம்மைப்போல் பிறரையும் அன்புகூர்வதாகும், எனவே நாம் ஒவ்வொருவரும், அகிலத் திருஅவையும் இயேசுவின் கருணைக்கு மனம் மாறுவதற்காக இத்திருப்பலியில் மன்றாடுவோம் என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.