2015-03-16 15:27:00

பாகிஸ்தானின் சிலுவைப்பாதையில் இந்தியத் திருஅவையும் உடன் பயணி


மார்ச்,16,2015. லாகூர் புறநகர்ப் பகுதியில் இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள்  இஸ்லாம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதற்குத் தனது கண்டனத்தை வெளியிட்ட அதேவேளை, துன்புறும் இம்மக்களின் சிலுவைப் பாதையில் இந்தியத் திருஅவையும் செபத்தோடு, உடன்பயணிக்கிறது என்று கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்த அப்பாவி கிறிஸ்தவர்களின் இரத்தம், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சகிப்புத்தன்மையும், நல்லிணக்க ஒன்றிணைந்த வாழ்வும் உரையாடலும் இடம்பெற்று நல்ல கனிகளை வழங்க உதவட்டும் என்று கூறினார்.

இத்தவக்காலத்தில் நம் ஆண்டவர் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்பில் இந்த மக்கள் முழுமையாகப் பங்கு கொள்வார்கள் என்றும் உரைத்துள்ள கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இக்குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பஞ்சாப் மற்றும் கராச்சியில் பள்ளிகள் இத்திங்களன்று மூடப்பட்டன. 

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.