2015-03-16 14:41:00

திருத்தந்தையுடன் போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்கள் சந்திப்பு


மார்ச்,16,2015. இன்றைய உலகில் குடியேற்றதாரர் குறித்த சவால்களை எதிர்கொள்வதிலும், பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்றிணைப்பதிலும், போரின் காயங்களைக் குணப்படுத்துவதிலும் திருஅவையின் மேய்ப்புப்பணி கடமைகள் குறித்து போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை இடம்பெறும் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் வந்துள்ள போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில்  சந்தித்த திருத்தந்தை, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரிந்து வாழும் குடும்பங்களின் காயங்களைக் குணப்படுத்துவதில் போஸ்னியா-ஹெர்செகொவினா ஆயர்கள் ஒரு தந்தைபோல் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் துறவிகள் ஆண்டு குறித்தும் தனது உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போஸ்னியா-ஹெர்செகொவினா மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும், துறவற சபையினருக்கும் இடையே நிலவ வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் வலியுறுத்தினார்.

போஸ்னியா-ஹெர்செகொவினா மக்கள் தங்கள் வரலாற்றில் பல துன்பங்கள் மத்தியில் விசுவாசத்தைக் காப்பாற்றி வருவது குறித்து மகிழ்வை வெளியிட்ட திருத்தந்தை, அம்மக்களைச் சந்திப்பதற்கு சரயேவோவில் தான் மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணம் பற்றியும் பேசினார்.

திருத்தந்தையின் சரயேவோ திருத்தூதுப் பயணம் வருகிற ஜூன் 6ம் தேதி சனிக்கிழமையன்று இடம்பெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.