2015-03-16 16:17:00

திருத்தந்தை-கடவுள் நம்மீது அதிகமதிகமாக அன்பு செலுத்துகிறார்


மார்ச்16,2015. கடவுள் நம்மீது அன்பு கூருகிறார், உண்மையிலேயே நம்மீது அன்பு செலுத்துகிறார், அதிகமதிகமாக அவர் அன்பு செலுத்துகிறார், நற்செய்தி, விசுவாசம் மற்றும் இறையியலின் சாராமே அன்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் சுதந்திரமாகவும், எல்லையற்ற விதத்திலும் நம்மீது அன்பு கூருகிறார், இவ்வாறு கடவுள் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்று கூறினார்.

நாம் நமக்குள் கடவுளின் அன்பை உணருகிறோம் என்று திருச்சிலுவையை நோக்கியபடி உரைத்த திருத்தந்தை, கடவுளே நீர் ஒருவரே நல்லவர், உயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் நலன்களால் நிறைத்து என, நான்காவது நற்கருணை மன்றாட்டில் நாம் செபிப்பதுபோல, இந்த அன்பை, கடவுள் முதலில் படைப்பில் வெளிப்படுத்துகிறார் என்றும், கடவுள் சுதந்திரமாக வழங்கிய அன்பு உலகின் தொடக்கத்திலேயே இருந்தது என்றும் கூறினார்.

பணிவின்மையால் நாம் கடவுளின் நட்புறவை இழந்தபோதிலும், அவர் நம்மைச் சாவின் அழிவுக்கு விட்டுவிடவில்லை, ஏனெனில் தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர் எனவும் நற்கருணை மன்றாட்டில் நாம் செபிக்கின்றோம், கடவுள் தமது இரக்கத்தால் இவ்வுலகுக்கு வந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுள் சுதந்திரமாகக் கொடுத்த அன்பு படைப்பில் வெளிப்படுவதுபோல, மீட்பு வரலாற்றில் பல நிலைகளில் வெளிப்படுகின்றது, கடவுள் தம் மக்களைத் தேர்ந்தெடுத்தது அவர்கள் அதற்குத் தகுதியடையவர்கள் என்பதால் அல்ல, ஆனால் அனைத்து மக்களிலும் மிகச் சிறிய இனம் என்பதாலே என்றும் உரைத்தார் திருத்தந்தை.

மனிதர் தொடர்ந்து கடவுளின் உடன்படிக்கையை மீறினாலும், அவர்களைக் கைவிடாமல், காலம் நிறைவுற்றபோது அவர்களோடு இயேசுவின் குருதியில் புதிய பிணைப்பை ஏற்படுத்தினார், இந்தப் புதிய, நித்திய உடன்படிக்கையை எதனாலும் உடைக்க முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை.

பவுலடிகளார் நமக்குச் சொன்னதுபோன்று(எபே,2:2-3), இரக்கத்தில் செல்வராகிய கடவுள் நாம் நம் பாவங்களால் இறந்தவர்களாய் இருந்தாலும், அவர் நமக்கு வாழ்வை வழங்கினார், கிறிஸ்துவின் சிலுவை, கடவுள் நம்மீது கொண்டுள்ள கருணை மற்றும் அன்பின் உச்சகட்ட பரிசோதனையாக இருக்கிறது, இயேசு நம்மை இறுதிவரை அன்புகூர்ந்தார் (யோவா.13:1), அவ்வன்பு தமது இவ்வுலக வாழ்வின் இறுதிவரை மட்டுமல்ல, அன்பின் கடைகோடி எல்லைவரை இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை

நம் ஆண்டவர் நம்மை மன்னிக்கிறார், அவரின் கருணையால், அவர் அனைவரையும் எப்போதும் மன்னிக்கிறார் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.