2015-03-14 15:25:00

திருத்தந்தை - இன்றைய சமூகத்துக்கு நல்ல ஆசிரியர்கள் தேவை


மார்ச்,14,2015. ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்த அதேவேளை, கணனிகள் பாடங்களின் உட்பொருளைக் கற்றுத்தரலாம், ஆனால் இன்றைய இளையோரில் விழுமியங்களையும் நம்பிக்கைகளையும் பதியவைப்பது நல்ல ஆசிரியராலே இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

UCIIM என்ற இத்தாலிய கத்தோலிக்க ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள் அமைப்பு தொடங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ்வமைப்பின் ஏறக்குறைய இரண்டாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

தான் ஆசிரியராக பணியாற்றிய வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்விப்பணி ஓர் அழகான பணி, ஆனால் ஆசிரியர்கள் பள்ளியில் செலவழிக்கும் நேரம் மட்டுமல்ல, பாடங்களைத் தயாரிப்பதற்கும், ஒவ்வொரு மாணவருடனும்  அவர்கள் செலவழிக்கும் நேரம் அதிகம் என்பதால் அவர்களுக்குக் ஊதியம் குறைவாக வழங்கப்படுவது கவலைதரும் விடயம் என்றும் கூறினார்.

தனது அர்ஜென்டீனா நாட்டில் தரமான ஊதியம் கிடைப்பதற்காக ஆசிரியர்கள் இரண்டு பள்ளி நேரங்களிலும் வேலை செய்கின்றனர் என்றும், ஆசிரியப் பணி மிகுந்த பொறுப்புமிக்கது என்றும் உரைத்த திருத்தந்தை, ஆசிரியர்கள் மாணவருக்கு ஆன்மீகப் பெற்றோர் போன்றவர்கள், குறிப்பாக, ஆசிரியரின் பொறுமையை அடிக்கடிச் சோதிக்கும் மிகவும் இன்னல்தரக்கூடிய மாணவருக்கு, ஆன்மீகப் பெற்றோர் போன்றவர்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.

எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்வோரைக் கண்டுபிடிப்பதற்கு கடினமாக இருக்கும் ஒரு சமூகத்தில், இளையோருக்குப் பள்ளிகளில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் தேவைப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, பள்ளிக்கும், கல்விக்கும், கலாச்சாரத்துக்கும் அர்த்தம் கொடுக்கக் கூடியவர்களாய் ஆசிரியர்கள் இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகள் இளையோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.