2015-03-14 11:33:00

திருஅவையில் ஜூபிலி ஆண்டுகள்


மார்ச்,14,2015. பொதுவாக, கத்தோலிக்கத் திருஅவையில் இருபத்தைந்து (25) ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித ஜூபிலி ஆண்டு அறிவிக்கப்படுகிறது. அச்சமயத்தில் சிறப்பு வழிபாடுகளும் சிறப்புத் திருப்பயணங்களும் இடம்பெறும். மனமாற்றத்துக்கும் மனம் வருந்தலுக்கும் சிறப்பாக அழைப்பு விடுக்கப்படும்.

அருளடையாளங்கள், குறிப்பாக, ஒப்புரவு அருளடையாளத்தின் மூலம் கடவுளின் அருளை அனுபவிப்பதற்குச் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பழங்கால எபிரேய மரபுப்படி, இஸ்ரயேல் மக்கள் மத்தியில் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கத்தில், தங்களின் சொத்துக்களை இழந்த குடும்பங்கள், ஏன் தங்களின் சுதந்திரத்தை இழந்தவர்கள் மீண்டும் அதனைப் பெறும் நோக்கத்தில்      ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூபிலி ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது.

கத்தோலிக்கத் திருஅவையில் 1300ம் ஆண்டில் திருத்தந்தை 8ம் போனிபாஸ் புனித ஆண்டை அறிவித்தார். பின்னர், ஒவ்வொரு தலைமுறையும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஜூபிலி ஆண்டின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1475ம் ஆண்டிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித ஜூபிலி ஆண்டு திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை திருஅவையில் 26 ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இறுதியாக இரண்டாயிரமாம் ஆண்டில் நடைபெற்றது. அரசியல் பிரச்சனைகள் காரணமாக 1800 மற்றும் 1850ம் ஆண்டுகளில் ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்படவில்லை. இதுவரை இரண்டு சிறப்பு ஜூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் மீட்பின் 1900மாம் ஆண்டையொட்டி, திருத்தந்தை 11ம் பயஸ் 1933ம் ஆண்டிலும், மீட்பின் 1950ம் ஆண்டையொட்டி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் 1983ம் ஆண்டிலும் சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்தனர். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டையொட்டி  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13, 2015 இவ்வெள்ளியன்று கருணையின் புனித ஆண்டு என்ற சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.