2015-03-14 10:17:00

சிறப்பு ஜூபிலி ஆண்டு-“கருணை”-டிச. 08,2015 – நவ.20,2016


மார்ச்,14,2015. கத்தோலிக்கத் திருஅவையின் பணி, கருணை என்ற பண்புக்குச் சாட்சியாகத் திகழ்வது என்பதைக் கோடிட்டுக் காட்டும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையின் புனித ஆண்டு என்ற சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது தலைமைப்பணியின் நிறைவு நாளான இவ்வெள்ளியன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய தவக்கால பாவமன்னிப்பு திருவழிபாட்டில் மறையுரையாற்றியபோது இந்த ஜூபிலி புனித ஆண்டை அறிவித்தார்.

திருஅவை தனது மறைப்பணியில், கருணை என்ற பண்புக்கு எவ்வாறு தெளிவான சாட்சியாகத் திகழ்வது என்று அடிக்கடி நினைத்துப் பார்த்தேன், அதனால் ஒரு சிறப்பு புனித ஆண்டை அறிவிப்பதற்குத் தீர்மானித்தேன், இந்தப் புனித ஆண்டு 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதிவரை சிறப்பிக்கப்படும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“உங்கள் வானகத் தந்தை  இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லூக்.6,36)” என்ற விவிலிய திருச்சொற்கள், இந்த ஜூபிலி புனித ஆண்டின் தலைப்பு எனவும் கூறிய திருத்தந்தை, இரக்கம் என்ற இந்தப் பண்பு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது என்று புன்முறுவலோடு, மறையுரையில் கூறினார்.

இத்திருவழிபாட்டை நிறைவு செய்த பின்னர் வத்திக்கான் பசிலிக்காவில் அமர்ந்திருந்த  ஓர் அருள்பணியாளரிடம் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின்னர் தானும் மற்றோர் இடத்தில் அமர்ந்து ஒப்புரவு அருளடையாளத்தை சிலருக்கு நிறைவேற்றினார்.  

இறையருளால் தொடப்பட்ட அனைவருக்கும் ஆலயத்தின் கதவுகள் எப்போதும் அகலத் திறந்திருக்கின்றன, அவர்கள் நிச்சயமாக இறைவனின் மன்னிப்பைப் பெறலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற தவக்கால பாவமன்னிப்பு பக்தி முயற்சி உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் மார்ச் 13 மாலை முதல் மார்ச் 14 மாலை வரை கடைப்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடங்கி வைத்த நிகழ்வில் சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.