2015-03-14 11:28:00

கருணையின் புனித ஆண்டு பற்றிய தகவல்கள்


மார்ச்,14,2015. வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை பெருவிழாவன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திலுள்ள புனிதக் கதவு திறக்கப்படுவதோடு இந்த  கருணை ஜூபிலி ஆண்டு ஆரம்பிக்கும் என்று, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இந்த சிறப்பு ஜூபிலி ஆண்டின் நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றுள்ள இத்திருப்பீட அவை, கருணையின் புனித ஆண்டு குறித்த மேலும் பல தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நிறைவுற்றதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளன்று தொடங்கும் இந்த ஜூபிலி ஆண்டு, அச்சங்கத்தில் தொடங்கப்பட்ட பணிகள் திருஅவையில் தொடர்ந்து நடைபெற உந்துதலாக உள்ளது என்றும் இத்திருப்பீட அவை கூறியுள்ளது.

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறன்று, அதாவது இறை இரக்க ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவின் முன்னால் இந்தப் புனித ஆண்டு பற்றிய திருத்தந்தையின் ஆணை பொதுப்படையாக, ஆடம்பரமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி  கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று இந்த ஆண்டு நிறைவடையும்.

இந்த ஜூபிலி ஆண்டில், கருணையின் நற்செய்தியாளர் எனக் குறிப்பிடப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து ஞாயிறு வாசகங்கள் எடுக்கப்படும் என்றும் புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை அறிவித்துள்ளது.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.