2015-03-13 14:21:00

தலைமைப்பணியில் ஈராண்டு நிறைவு காணும் திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,13,2015. இறைவன் தன்னை இவ்விடத்தில் ஒரு குறுகிய காலத்துக்கு வைத்துள்ளார்  என்று தான் உணருவதாக, புதிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெக்சிகோ நாட்டின் “Televisa” தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் Valentina Alazraki என்பவருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் வழங்கிய ஒரு நீண்ட நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவு மார்ச் 13, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி இந்நேர்காணல் இடம்பெற்றது. 

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் பற்றிய விபரங்கள், தனது கடந்த இரண்டு ஆண்டு பாப்பிறைத் தலைமைப்பணி, திருப்பீட தலைமையகச் சீர்திருத்தம், தனது பாதுகாப்பு, அரசியல், குடும்பம் பற்றிய ஆயர்கள் மாமன்றம் முன்வைக்கும் சவால்கள், திருஅவையை அனைத்துச் சிறாருக்கும் வயதுவந்தோருக்கும் ஏற்றதாக அமைத்தல், குடியேற்றதாரர், போதைப்பொருள் வர்த்தகம் என, பல தலைப்புகளில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் திருத்தந்தை.

வருகிற செப்டம்பரில் உலக குடும்பங்கள் தினத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஐக்கிய நாடு செல்லும்போது மெக்சிகோவுக்குச் செல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு மிக விளக்கமாகப் பதிலளித்த திருத்தந்தை, மெக்சிகோ திருத்தூதுப் பயணத்துக்கு ஒரு வாரம் தேவைப்படும் என்று கூறினார்.

இன்றைய உலகில் பசிக்கொடுமையால் இடம்பெறுவதே குடியேற்றம், பசியாலும், சண்டைகளாலும் துன்புறும் மக்கள் தங்கள் நாடுகளிலிருந்து வெளியேறுகின்றனர், குடியேற்றம் பசியோடும், வேலையின்மையோடும் தொடர்புடையது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.