2015-03-13 14:45:00

கீழைவழிபாட்டுமுறை பேராயப் பிரதிநிதிகள் குழு சிரியாவில் பயணம்


மார்ச்,13,2015. சிரியாவில் தொடர்ந்து துன்புறும் மக்கள் மற்றும் சிரியா திருஅவை மீது திருப்பீடம் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கத்தில், கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயப் பிரதிநிதிகள் குழு ஒன்று அந்நாட்டில் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளது.

கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயச் செயலர் பேராயர் Cyril Vasil அவர்கள் தலைமையில் இவ்வெள்ளியன்று சிரியா சென்றுள்ள இக்குழு, சிரியா கத்தோலிக்கரையும், தேசிய காரித்தாஸ் நிறுவனப் பொறுப்பாளர்களையும், இளையோரையும் சந்தித்து, திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும்.

2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி கொலை செய்யப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் Frans Van Der Lugt அவர்கள் சமாதியிலும் இக்குழுவினர் செபிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிரியாவில் ஐந்தாவது ஆண்டாக சண்டை இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டினர் உலகினரால் கைவிடப்பட்டதாக உணர்கின்றனர் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இச்சண்டையை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலக சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாவில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நாற்பது இலட்சத்து மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர் மற்றும் 76 இலட்சம் பேர் சிரியாவிலேயே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

சிரியா மக்களில் ஏறக்குறைய பாதிப்பேர் கட்டாயமாக தங்கள் இடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.