2015-03-13 14:49:00

கிறிஸ்தவர்களின் உரிமைகள் காக்கப்பட ஐ.நா.வில் வலியுறுத்தல்


மார்ச்,13,2015. உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கை ஒன்றை, திருப்பீடம் உட்பட பல நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 28வது அமர்வில் இவ்வெள்ளியன்று சமர்ப்பித்தன.

இரஷ்ய கூட்டமைப்பு, லெபனான் ஆகிய நாடுகளுடன் இணைந்து இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளது திருப்பீடம். 

இவ்வறிக்கை குறித்துப் பேசிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இக்காலத்தில் பல்வேறு சமயக் குழுக்களின் வாழ்வு, குறிப்பாக, கிறிஸ்தவர்களின் வாழ்வு கடுமையாய் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இம்மக்களின் வாழ்வு கேள்விக்கு உள்ளாகியுள்ளது என்றும், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களின் இடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர், அடிமைகளாக விற்கப்படுகின்றனர், கொலைசெய்யப்படுகின்றனர், தலை துண்டிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார் பேராயர் தொமாசி.

மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளிலும், சமூகங்களிலும் கிறிஸ்தவர்கள் ஆற்றியுள்ள நற்பணிகளை அனைவருக்கும் தெரிந்தவையே என்றும், இம்மக்களின் துன்பநிலை அகற்றப்பட்டு, அமைதியான நல்லிணக்கக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப அரசுகளும், பொதுமக்கள் சமுதாயமும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்     பேராயர் தொமாசி.

திருப்பீடம், இரஷ்ய கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிலிப்பீன்ஸ், இஸ்ரேல் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.