2015-03-12 16:30:00

மத உரிமையையும் பேச்சுரிமையையும் இணைப்பது, பெரும் சவால்


மார்ச்,12,2015. மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதை மறுக்கமுடியாது என்றாலும், மத உரிமை, மற்றும், பேச்சுரிமை என்ற இரு உரிமைகளையும் தகுந்த வகையில் இணைப்பது, அகில உலக அரசுகள் முன்னிருக்கும் பெரும் சவால் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், மார்ச் 11, இப்புதனன்று, ஐ.நா.வின் மனித உரிமை அவையின் 28வது கூட்டத்தில் கலந்துகொண்டபோது, இவ்வாறு பேசினார்.

தெளிவான, மனம் திறந்த உரையாடலை வளர்ப்பதற்குப் பதிலாக, ஊடகங்கள் வழியே, அச்சத்தை வளர்க்கும் அவதூறான செய்திகள் பெருகிவருவது, மதங்களுக்கிடையே வெறுப்பையும், நம்பிக்கையற்ற உறவையும் வளர்க்கின்றன என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் கூறினார்.

மதத்தின் பெயரால் உலகில் வளர்ந்து வரும் வன்முறைகள், உண்மையிலேயே மதத்தினால் உருவாவது கிடையாது, மாறாக, மதத்தின் கோட்பாடுகளைத் தவறாகப் பொருள் கொள்வதன் விளைவாக வன்முறைகள் உருவாகின்றன என்று பேராயர் தொமாசி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரியாத பேச்சுரிமை, வன்முறைகளை வளர்ப்பதற்கு துணை போகின்றன என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில்  விளக்கினார்.

பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள் என்று பன்முகம் கொண்ட உலகில், அடுத்தவருக்கு தரவேண்டிய மரியாதையே அமைதியாக, ஒற்றுமையாக வாழும் அடிப்படை வழி என்று பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.