2015-03-12 16:02:00

திருத்தந்தை : கொரியப் பயணம், தன் பணிக்கு பெரும் உந்து சக்தி


மார்ச்,12,2015. கொரியாவில் தான் மேற்கொண்ட பயணம், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவைக்கு தான் ஆற்றும் பணிக்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, வத்திக்கானுக்கு வருகை தரும் ஆயர்களின் அத் லிமினா பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருக்கும் கொரியா நாட்டு ஆயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, ஏழு மாதங்களுக்கு முன், தான் கொரியாவில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இன்னும் பசுமையாக தன் மனதில் உள்ளது என்று கூறினார்.

Paul Yun Ji-chung மற்றும் ஏனைய மறைசாட்சிகளை முத்திப்பேறு பெற்றவர்களாக உயர்த்திய நிகழ்வு, தன் பயணத்தின் சிகரமாக அமைந்ததென கூறியத் திருத்தந்தை, பொது நிலையினரின் விசுவாசத்தின் மேல், கொரியத் திருஅவை கட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தொடர்புகளை வளர்க்கும் தொழில் நுட்பத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ள கொரியா, உண்மையான, அடிப்படையான மனிதத் தொடர்புகளை இழந்துவரும் ஆபத்தில் உள்ளது என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆசிய இளையோர் நாளைக் குறித்து பேசியத் திருத்தந்தை, கிறிஸ்துவைக் குறித்த முழுமையான உண்மையை, இளையோர் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைப்பது ஆயர்கள், அருள் பணியாளர்கள் அனைவருக்கும் முன் இருக்கும் ஒரு சவால் என்று திருத்தந்தை கூறினார்.

தங்கள் பணித் தளங்களுக்குத் திரும்பிச் செல்லும் ஆயர்கள், தாங்கள் எப்போதும் பணியாளர்கள் என்பதை முழுமையாக உணர்ந்து, அதை, தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்த வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரிய ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.