2015-03-12 16:37:00

உலகப் போரின் 70ம் ஆண்டு நினைவு - ஜப்பான் ஆயர்கள் அழைப்பு


மார்ச்,12,2015. அமைதியை நிலைநாட்ட இதுவரை பணியாற்றி வந்த ஜப்பான் நாடு, தொடர்ந்து அமைதிப் பணியில் ஈடுபடவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

1945ம் ஆண்டு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போரின் 70ம் ஆண்டு நினைவை உலகம் கொண்டாடிவரும் வேளையில், இவ்வுலகப் போரில் பெருமளவு பாதிக்கப்பட்ட ஜப்பான் நாடு, தொடர்ந்து அமைதிப் பணிகளில் தன்னையே அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜப்பான் ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி, வத்திக்கான் நாளிதழ், L’Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.

வர்த்தகமும், பொருளாதாரமும் உலக மயமாக்கப்பட்டு வரும் சூழலில், இருப்போர் -  இல்லாதோருக்கு இடையே நிலவும் இடைவெளி ஒவ்வோர் ஆண்டும் பெருகிவருவதை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறும் ஜப்பான் ஆயர்கள், இந்த இடைவெளியைக் குறைப்பது, உலக அமைதிக்கு மிகவும் அவசரமான ஒரு தேவை என்று கூறினர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகளும், இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிந்து 50 ஆண்டுகளும் நிறைவுற்றுள்ள சூழலில், ஜப்பான் நாட்டில், எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள், அமைதியை வளர்க்க விழையும் உலக மக்களோடு இணைய வேண்டும் என்று ஆயர்கள் தங்கள் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர்.

1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய இரண்டாம் உலகப் போர், 1945ம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவிலும், செப்டம்பர் மாதம் ஜப்பானிலும் முடிவுக்கு வந்தது. 8 கோடிக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட இந்தப் போர், அன்றைய உலக மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினரை கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.