2015-03-12 16:11:00

ஈராண்டு பணியை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,12,2015. கடந்த ஈராண்டுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியத் தலைமைப் பணியில் பல்வேறு பண்புகள் வெளிப்பட்டாலும், அவர் பயன்படுத்தி வரும் மொழி, உலகினர் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது தனிப்பட்ட ஒரு பண்பாக உள்ளது என்று இயேசு சபை அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மனம் விட்டுப் பேசிய ஒரு பேட்டியை முதல் முறையாக வெளியிட்டவரும், உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் Civiltà Cattolica என்ற இதழின் ஆசிரியருமான அருள்பணி Spadaro அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் உலகத் தலைவர் என்ற உயர்வான இடத்தில் இருந்தாலும், அவர் பேசும் சொற்கள், எளிய மக்களையும் சென்றடைகிறது என்பதே அவரது தலைமைப் பணியின் முக்கிய அம்சம் என்று அருள்பணி Spadaro அவர்கள், சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை வழங்கும் உரைகளை கத்தோலிக்க உலகம் மட்டுமல்ல, பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் ஆர்வமாகப் பின்பற்றுகின்றனர் என்பது வியப்பையும், மகிழ்வையும் தரும் செய்தியாக அமைந்துள்ளது என்று ஆசிரியர் Spadaro அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில் இது ஒரு சிறப்புக் காலம், ஏனெனில், அவர் வத்திக்கானில் துவங்கியிருக்கும் மாற்றங்களும், குடும்பத்தை மையப்படுத்தி கூடவிருக்கும் ஆயர்களின் பொது மன்றமும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன என்று அருள் பணி Spadaro அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.