2015-03-11 16:18:00

புனித வியாழனன்று, திருத்தந்தை, Rebbibia சிறை கைதிகளுடன்


மார்ச்,11,2015. ஏப்ரல் 2, புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள Rebbibia சிறையில் உள்ள கைதிகளைச் சந்திப்பார் என்றும், மாலை 5.30 மணிக்கு, அங்குள்ள கோவிலில் ஆண்டவரின் இறுதி இரவுணவு திருப்பலியை ஆற்றும் வேளையில், சிறைபட்டிருக்கும் பெண் கைதிகள் சிலரின் காலடிகளைக் கழுவுவார் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்துலக நற்கருணை மாநாடுகளுக்குப் பொறுப்பாகப் பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிவரும் பேராயர் பியெரோ மரினி (Piero Marini) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பொறுப்பில் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

திருவழிபாடு மற்றும் அருள் அடையாளங்களின் நெறிமுறைகள் பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா, அருள் பணியாளர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியாமினோ ஸ்டெல்லா, மற்றும் பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் ஸ்டானிஸ்லாவ் ரில்கோ ஆகியோரை, நற்கருணை மாநாடு திருப்பீட அவையின் உறுப்பினர்களாக திருத்தந்தை நியமித்துள்ளார்.

திருவழிபாடு இயலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள, 73 வயது நிறைந்த பேராயர் மரினி அவர்கள், முன்னாள் திருத்தந்தையர் இரண்டாம் ஜான்பால், பெனடிக்ட் ஆகிய இருவரும் நிகழ்த்திய வழிபாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.