2015-03-11 17:23:00

சூரியஒளி விமானம் இந்தியாவில் தரையிறங்கியது


மார்ச்,11,2015. உலகை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை துவங்கியிருக்கும் சூரிய ஒளியால் இயங்கும் விமானம், தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக, இந்தியாவின் அகமதாபாத் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கிறது.

‘சோலார் இம்பல்ஸ்-2’ (Solar Impulse 2) என்று அழைக்கப்படும் அந்த விமானம், தனது பயணத்தை திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து தொடங்கியது. ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது.

அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாம் கட்டப்பயணத்தைத் துவங்கிய இந்த விமானம், அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்து, செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளது.

2050ம் ஆண்டுக்குள் மின்சாரத்திற்கான மூலப்பொருளாக சூரிய சக்தியே பெருமளவில் பயன்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக இந்த சூரிய ஒளி விமானம் பார்க்கப்படுகிறது.

2010ம் ஆண்டு, Solar Impulse 1 என்ற முயற்சியால் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், உலகைச் சுற்றிவர எடுக்கப்பட்டுள்ள Solar Impulse 2ன் இந்த முயற்சி வியக்கத்தக்க முயற்சியாகவும், கடினமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.