2015-03-10 16:29:00

திருத்தந்தை: மன்னிக்கத் தெரிந்தவர்களே மன்னிப்பை பெறுகின்றனர்


மார்ச்,10,2015. கடவுள் நம்மை மன்னிக்கிறார், அதேவேளை, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும் என நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனிடம் மன்னிப்பை வேண்டுபவர்கள், அவர் கற்பித்த 'வானகத்திலுள்ள எங்கள் தந்தாய்' என்ற செபத்தின் படிப்பினைகளை பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும் என்றார்.

இறைவன் அனைத்து வல்லமையும் உடையவராக இருந்தாலும், அவரின் வல்லமை, இதயத்தின் மூடிய கதவுகளுக்கு முன்னால் கைகட்டி நிற்கிறது, ஏனெனில் நமக்குத் தவறிழைத்தவர்களை நாம் மன்னிக்கவில்லையென்றால், இறைவனுக்கும் நம் இதயக் கதவுகள் மூடப்பட்டதாகவே இருக்கும் என்றார் திருத்தந்தை.

நான் தவறு செய்துவிட்டேன், மனம் வருந்துகிறேன் என்று கூறுவதும், நான் பாவமிழைத்துவிட்டேன், மன்னிப்பை வேண்டுகிறேன் என உரைப்பதும் வேறு வேறு என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘எனக்குத் தவறிழைத்தவர்களை நான் மன்னிப்பதுபோல், இறைவா என்னை மன்னித்தருளும்' என நாம் செபிப்பது வாழ்வில் உண்மையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றார்.

நாம் பிறருக்கு வழங்கும் மன்னிப்பே நமக்கு இறைவனால் திருப்பி வழங்கப்படுகிறது, ஏனெனில், இறைமன்னிப்பிற்கு, நாம் பிறரை மன்னிப்பது ஒரு முன்நிபந்தனையாக உள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம்: வத்திக்கான வானொலி








All the contents on this site are copyrighted ©.