2015-03-09 15:14:00

வாரம் ஓர் அலசல் – தானாக மாறாத ஒருவரை பிறர் மாற்றுவது கடினம்


மார்ச்,09,2015. இராதாபாய். இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரியில் வரலாற்று துறைத் தலைவர். இவர் வள்ளுவன் பார்வை என்ற பார்வையற்றவர்க்கான இணையதளத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். இந்த நிலையை இவர் எப்படி எட்டினார்? இராதாபாய் பிறந்த நான்காவது மாதத்திலேயே அவருக்குப் பார்வையில் பிரச்சனை தொடங்கி விட்டது. நான்கு வயதானபோது இனி பார்வை கிடையாது என்ற நிலை. இராதாபாய்க்கு தனது நிலையை முழுமையாகப் புரியவைத்தவர் அவரது தந்தையும் தமிழாசிரியருமான கிருஷ்ணமூர்த்தி. சங்க இலக்கியம் முதல் பாரதியின் கவிதை வரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் தந்தை. கல்வியின் முக்கியவத்துவத்தை மனதில் வலுவாக விதைத்தார். மற்றவர்களால் செய்ய முடிந்ததை உன்னால் செய்ய முடியும், ஆனால் உன்னால் செய்ய முடிந்ததை மற்றவர்களால் செய்ய முடியாது என்று சொல்லிச் சொல்லி இராதாபாயை தன்னம்பிக்கை பெண்ணாக உருவாக்கினார். உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற இராதாபாய், குடும்பச் சூழ்நிலை காரணமாக மேல்படிப்பு படிக்காமல் கைத்தொழில் கற்றுக் கொள்ளச் சென்றார். ஆனால் பிரியா என்பவரின் உதவியால் கல்லூரியில் சேர்ந்து, முதல்வரே வியக்கும் வகையில் பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். முதுகலைப்பட்டமும் பெற்று, படிப்பின் மேலுள்ள தாகத்தால் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இராதாபாய். தென்னிந்தியாவிலேயே முனைவர் பட்டம் பெறும், பார்வையிழந்த முதல் பெண் என்ற புகழும் அச்சமயத்தில் இராதாபாய் அவர்களுக்குக் கிடைத்தது.

உலக மகளிர் தினம் கொண்டாடிய மகிழ்வில் உள்ள நாம், இந்த நல்ல நாளில் இத்தகைய தன்னம்பிக்கை பெண்களை மனதார வாழ்த்துவோம், பாராட்டுவோம். இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், உலக மகளிர் தினத்துக்கு, வாழ்த்துச் சொன்ன திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “பெண்கள் நமக்கு வாழ்வை மட்டும் வழங்கவில்லை, அதையும் கடந்து நம்மைப் பார்க்க அனுமதிக்கின்றனர்... பெண்கள் ஓரங்கட்டப்படும் ஓர் உலகு, வளமையற்ற உலகு” என்றும் சொன்னார். இராதாபாய் போன்ற பெண்கள், நாம் மனித வாழ்வைக் கடந்து சிந்திக்க அழைக்கின்றனர். இராதாபாய் அவர்களைப் பேட்டி கண்ட தினமலர் தினத்தாள், அவர் இந்த நிலையை அடைவதற்கு மேற்கொண்ட உழைப்பும், காட்டியிருக்கும் பொறுமையும் அசாத்தியமானது என்று பாராட்டியுள்ளது. இராதாபாய் அவர்கள் தனது தன்னம்பிக்கை பற்றி மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனது துறை என்று இல்லாமல் எல்லாத்துறை மாணவிகளிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பதை முக்கியமாகச் செய்து வருகிறேன் அதுவே பார்வை இல்லாத மாணவிகள் அதுவும் கிராமப்புற மாணவிகள் என்றால் அவர்களைத் தேடிப்போய் உற்சாகப்படுத்தி படிக்க வைத்து வருகிறேன். நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைப்படுவதைவிட இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும், நம்மிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்த வேண்டும், மேலும் நாம் நம்மை எப்போதும் ஏதோ ஒரு நலமான ஆக்கப்பூர்வமான சமூகத்திற்கு பயன்தரக்கூடிய, மனதிற்கு மகிழ்வு தரக்கூடிய விடயங்களில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இவை என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட எல்லோருமே கடைப்பிடிக்க வேண்டும். என்னைப் பார்த்தாலே நம்பிக்கை வருகிறது என, நான் கல்லூரியில் பேசப்போகும்போது மாணவியர் கூறுவார்கள். உண்மைதான். நான் என் பார்வை இல்லாத கண்களைக் கண்ணாடி போட்டுக்கூட மறைப்பது இல்லை. “இதுதான் நான்” என்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன். நான் சார்ந்த பெண் சமுதாயம் கல்வி அறிவோடு சிறப்பாக வாழவும் வாழ்நாள் முழுவதும் முயற்சிப்பேன். எனது கணினியில் உள்ள நூல்களின் எண்ணிக்கை மிக அதிகம். நிறைய தேடித் தேடி கணினி உதவியுடன் படித்துக்கொண்டு இருப்பேன்.

தன்னம்பிக்கை எனும் புது இரத்தத்தை, தன்னைச் சார்ந்த சமூகத்துக்குப் பாய்ச்சும்  இராதாபாய்கள் வாழ்க, வளர்க என்று, உலக மகளிர் நாளில் நாம் வாழ்த்தினோம். எவ்வித இக்கட்டான சூழலிலும் தங்களின் வலிமையை உணர்ந்து, வாழ்க்கையில் உயர்ந்துள்ள பெண்களின் பட்டியல் சில ஆண்டுகளாக உலகில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருச்சியில் பெட்ரிசியா என்ற கைம்பெண், ஆண்கள் செய்யும் முடிதிருத்தம் கடையை நடத்தி தனது இரண்டு குழந்தைகளையும், நோயாளி மாமியாரையும் காப்பாற்றி வருகிறார் என விகடன் இதழில் வாசித்தோம். பெட்ரிசியாவின் கணவர் திடீரென்று ஒரு விபத்தில் அடிபட்டு இரண்டு ஆண்டுகள் படுக்கையாகி இறுதியில் இறந்துவிட்டார். பெட்ரிசியா சொல்கிறார்...

 

அப்போது எனக்கு வயது 34. என் கணவரோடு பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். அவர் நடத்திய முடிதிருத்தம் கடையில் ஓர் ஓரமாக தையல் எந்திரத்தை வைத்து துணி தைத்துக் கொண்டிருப்பேன். அப்போது அங்கு நடக்கும் தொழிலைப் பார்த்து நானாகவே அதைக் கத்துக்க ஆரம்பிச்சேன். என் வீட்டுக்காரர்தான் எனக்கு குரு, வாடிக்கையாளர் ரெண்டுமே. அவருக்கு முடி வெட்டிவிட, ஷேவ் பண்ணச் சொல்வார். அவர் இறந்த பின், ஏற்கெனவே இருந்த கடன் பிரச்சனை காரணமா, கடையில இருந்த சாமான்கள், வேலையாட்கள்னு எல்லாமே போயிடுச்சு. மனசு ஒடிஞ்சு போயிட்டேன். ஆனாலும், இதைத்தவிர வேற தொழில் எனக்குத் தெரியல. அங்க இங்கனு கடனை வாங்கி, வாடகைக்கு ஒரு கடை எடுத்து நான் மட்டுமே தனி ஆளா நடத்த ஆரம்பிச்சேன். என் கடைக்கு ஆரம்பத்துல ஆண்கள் வரத் தயங்கினாங்க. கடையில வெறிச்சோடி உட்கார்ந்துட்டு இருந்தேன். நீங்க உங்க சகோதரிக்கு பணமோ பொருளோ தர வேணாம்... அவ உழைப்புக்கு ஊதியம் கொடுத்தா போதும்னு சொன்னேன். புரிஞ்சிக்கிட்டவங்க தொடர்ந்து வர ஆரம்பிச்சாங்க. காலையில 6 மணிக்கு கடைக்கு வந்தா, ராத்திரி 9 வரைக்கும் வேலை இருக்கும். ஒரு லேடி நர்ஸ், இல்ல, ஒரு லேடி டாக்டர் இவங்க தொடும்போது எப்படித் தப்பா தெரியாதோ, அப்படித்தான் எங்களுக்கும் இது ஒரு வேலை. இந்த இருக்கையில உட்கார்ற எல்லாரையுமே சகோதரர்களாகத்தான் நெனைக்குறேன். அவங்களும் சகோதரியா நெனச்சு, என்ன சூழ்நிலையில இந்தப் பொண்ணு இந்த வேலைக்கு வந்திருக்கு... அதுக்கு நாம உதவியா இருக்கணும்னு கொடுக்குற ஊக்கத்தாலதான் கடையைத் தொடர்ந்து நடத்த முடியுது. ஒரு நாள் கடைக்கு வந்த ஒரு தம்பி வேணும்னே இடிச்சுட்டு நின்னுச்சு. கணவனை இழந்துட்டு, எம் புள்ளைகளுக்காக உங்க முன்ன இப்படி கத்தரியும் கையுமா நிக்குறேன். உங்க அக்காவா இருந்தா அவளையும் இப்படித்தான் இடிச்சுட்டு நிப்பீங்களா தம்பி?னு அது கண்ணைப் பாத்துக் கேட்டேன். அதுக்குக் கண்ணே கலங்கிருச்சு. திரும்பிப் பாக்காமலே போயிருச்சு. ஒரு பொண்ணு தனியா இருந்தா தப்பா நடந்துக்குவா, நாமளும் தப்பா நடந்துக்கலாம்னு இங்க வளர்ந்து கெடக்குற மனநிலைதான், பொம்பளைங்கள முன்னுக்கு வர விடாமச் செய்ற இன்னொரு முட்டுக்கட்டை. அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நம்ம பாதையில போய்க்கிட்டே இருக்கணும்! என் புள்ளைங்க ரெண்டும் நேர்மையா உழைச்சு முன்னுக்கு வரணும்ங்கிறதுதான் நான் அவங்களுக்கு அடிக்கடி சொல்றது என்று பெட்ரிசியா அவர்கள் அத்தனை உறுதியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் சொல்வதிலுள்ள உண்மை நமக்கும் புரிந்தது. நாம் கடந்து வந்த வாரத்தில் சர்ச்சைக்குள்ளான, ’இந்தியாவின் மகள்!’ என்ற ஆவணப்படம் பற்றி இந்நேரத்தில் ஒருசில வார்த்தைகள் குறிப்பிடாமல் இருக்க முடியாது. பெண்களின் தன்னம்பிக்கை வளர்ந்துவரும் இக்காலத்தில், பெரும் சிரத்தையோடு ஏறக்குறைய அறுபது நிமிடம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தை தயாரித்துள்ள இலண்டனைச் சேர்ந்த இயக்குனர் லெஸ்லீ உட்வின் அவர்களைப் பாராட்டியே தீர வேண்டும். 2012ம் ஆண்டு இறுதியில் இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் இது. டெல்லி பேருந்தில் ஒரு காமவெறிக் கும்பலால் கொடூரமாக சிதைக்கப்பட்ட அந்த மாணவி பற்றிய படம் இது. இந்தக் கொடூரத்தைச் செய்ததாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங்கின் நேரடி வாக்குமூலம்தான் இன்று உலகை அதிர வைத்திருக்கிறது.

''எல்லாம் நடந்து முடிந்தவுடன் நாங்களே விட்டுவிடுவோம். கொலை செய்ய மாட்டோம். இப்போது எங்களுக்குத் தரும் தண்டனையால் இனி பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்கள், எல்லாம் முடிந்தவுடன் அவர்களைக் கொலை செய்துவிட்டுத்தான் செல்வார்கள்''  என்ற, இந்த மரண தண்டனை கைதியின் துடுக்கான பேச்சு, நம் சமுதாயத்தின் பலரது எண்ண ஓட்டங்களைத்தான் பிரதிபலிக்கின்றது என்று சொல்லலாம். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய ஆண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும், தெருவில் இறங்கிப் போராட வேண்டும் என்று மக்கள் நினைத்தால் அரசும் சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது என்று செய்தியையும் இப்படம் சொல்கிறது. ஆணாதிக்க மனநிலை என்பது, ஆண்களிடம் மட்டுமே இருப்பதில்லை. இந்தச் சமூகம் வளர்த்தெடுக்கும் பெண்களின் மனதிலும் மிக ஆழமாக ‘தாங்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் அல்ல’ என்பதைப் பதியவைக்கிறது. பெண்ணை ஒரு நுகர்பொருளாக மட்டுமே எண்ணும் சிந்தனையும் ஆணாதிக்கத்துக்குத் தூபம் போடுகிறது. பெண்ணே பெண்ணுக்கு எதிரியாகத் தூண்டப்படுவதும் ஆணாதிக்கத்தின் நீட்சிதான். ஆண்களின் இந்த மனநிலையை நிச்சயம் மாற்றியே ஆக வேண்டும். அதேநேரம் ஆணாதிக்க எண்ணம் இல்லாதவர்களும் ஆண்களில் உண்டு. பெட்ரிசியா சொன்னதுபோன்று, பெண்மையையும், பெண்களின் உயர்வையும்  வெளிப்படையாகவும், மறைவாகவும் சுரண்டும் வன்புத்தியுள்ள ஒவ்வோர் ஆணும் மற்ற பெண்களை, தங்களின் உடன்பிறந்த சகோதரியாக, தாயாக உணர்ந்தால், சமூகத்தில் தன்னம்பிக்கைப் பெண்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. பெண்களின் தரம் உயர்ந்தால் சமூகத்தின் தரமும் நிச்சயம் உயரும். இந்திய தேசியவாதி சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் கூறியது போன்று, முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர் மட்டுமே உலகை மாற்றத் தகுதியடையவர். எனவே, அன்பர்களே, சமூகத்தைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, முதலில் நாம் ஒவ்வொருவரும் நம்மை மாற்றுவோமா!   நம் ஒவ்வொருவரிலும் இருக்கும் பெண்மையைப் போற்றுவோமா!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.