2015-03-09 15:33:00

திருத்தந்தை : இறையியலும் புனிதத்துவமும் பிரிக்கமுடியாதவை


மார்ச்,09,2015. பாதுகாப்பான கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்து மக்களைப் பார்வையிடும் நிலைகளிலும், கல்வித் தொடர்புடைய வாக்குவாதங்களிலும் பயன்படுத்தப்பட்டுவந்த இறையியலை விட்டு நாம் உண்மையான இறையியலை பாதுகாக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்,

அர்ஜென்டினாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், நூற்றாண்டைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அதன் தலைவர் கர்தினால் மாரியோ அவ்ரேலியோ போலிக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை நூற்றாண்டைக் கொண்டாடுவது, இரண்டாம் வத்திக்கான பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டோடு இணைந்து சிறப்பிக்கப்படுகின்றது என அதில் கூறியுள்ளார்.

இறையியலைக் கற்பது மற்றும் கற்பிப்பது என்பது, நற்செய்தி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதைப் புரிந்துகொண்டு அதை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் அறிவிப்பதாகும் எனவும் தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இறையியலும் புனித்தத்துவமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன, அவை பிரிக்க முடியாதவை எனவும் தெரிவித்துள்ளார்.

இரக்கம் என்பது ஒரு மேய்ப்புப்பணி நடவடிக்கை மட்டுமல்ல, அதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் மையக்கருத்து எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது கோட்பாடுகள், சட்டங்கள், நன்னெறி வழிமுறை, ஆன்மீகம் ஆகியவை இரக்கத்தை மையம் கொண்டதாக அமையவேண்டும், இல்லையெனில் நம் இறையியலும், உரிமைகளும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளும் வீழ்ச்சியடையும் எனவும் கூறியுள்ளார்.

இறையியலைக் கற்பது என்பது வெறும் புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் கற்று, ஓர் இறையியல் அருங்கட்சியமாக வாழ்வதல்ல என்று அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை உண்மைகளை கிறிஸ்தவ மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதே இறையியல், ஏனெனில் திறமையற்ற அறிவாளியாகவோ, இரக்கமற்ற நன்னெறியாளராகவோ வாழ்வதல்ல இது என மேலும் கூறியுள்ளார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.