2015-03-09 15:09:00

கடுகு சிறுத்தாலும்–மன்றாட்டு மறுக்கப்படுவதற்கு காரணம் உண்டு


அந்த மனிதர் கடவுள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவர். என்ன நேர்ந்தாலும் கடவுளிடம்தான் சொல்வார். அவர் ஆசை ஆசையாக ஒரு மானை வளர்த்து வந்தார். அந்த மான் ஒருநாள் காணாமல் போய்விட்டது. உடனடியாக கடவுளிடம் உரிமையோடு முறையிட்டார் அந்தப் பக்தர். கடவுளே, எனது செல்ல மானைக் காணவில்லை, அதற்கு காரணம் யாரோ, அவர் என் கண் முன்னால் வந்து நிற்க வேண்டும், அந்த ஆளுக்கு என் கையாலேயே தண்டனை கொடுக்க வேண்டும் என்று மன்றாடினார். கடவுள் சற்று தயக்கம் காட்டினார். பக்தா, அது வேண்டாமே என்று சொல்லிப் பார்த்தார். பக்தர் கடவுளை விடுவதாக இல்லை. நீர் கட்டாயம் அந்த ஆளை என்முன் நிறுத்த வேண்டும், இது உனது பக்தனின் வேண்டுகோள், இதனை மறுக்காமல் நிறைவேற்ற வேண்டியது உமது கடமை என்றார் பக்தர். கடவுளும் பக்தரிடம், நன்றாக யோசித்துக் கேள் என்றார். நான் நன்றாக சிந்தனை செய்துதான் கேட்கிறேன் என்றார் பக்தர். சரி, வேறு வழியில்லை, உனது வேண்டுதலை நிறைவேற்றுகிறேன், உனது மான் காணாமல் போகக் காரணமானவர் இதோ உன் எதிரில் என்றார் கடவுள். பக்தரின் எதிரில் ஒரு சிங்கம் வந்து நின்றது. அதைப் பார்த்த பக்தர், ஐயோ, கடவுளே என்னைக் காப்பாத்து, தெரியாமல் கேட்டுவிட்டேன், என்னை மன்னித்துவிடு என்று அலறினார்.   

நம் வேண்டுதல் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.