2015-03-09 15:43:00

இயேசு நம் இதயத்திற்குள் நுழைந்து தூய்மைப்படுத்த அனுமதிப்போம்


மார்ச்,09,2015. இறைவனுக்கு எதிராகச்செயல்படும் நம் அனைத்துக் குணநலன்களையும் விரட்டி, நம் உள்ளமெனும் கோவிலைச் சுத்தப்படுத்த, இயேசுவை நாம் அனுமதிப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எருசலேம் கோவிலில் வியாபாரிகளை விரட்டி, கோவிலை சுத்தப்படுத்திய இயேசுவின் செயல் பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் பற்றி, ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களைக் காயப்படுத்தும் நம் உள்ளுணர்வுகளையும், புறம்பேசுதல், பகைமை, பொறாமை, உலகாயுதப்போக்கு போன்றவற்றையும் நம்மிலிருந்து விலக்கி, நம்மைத் தூய்மையாக்க, நாம் இயேசுவை அனுமதிக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.

இயேசு நமக்கெனக் கொணர்வது சாட்டையல்ல, மாறாக, இரக்கமே, ஆகவே அவரை நம் இதயத்திற்குள் அனுமதித்து நம்மைத் தூய்மையாக்குவோம் என்ற அழைப்பை முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை அன்பின் அடையாளமாக வெளிப்படுத்தி, ஏழைகள் மற்றும் சக்தியற்றவர்கள் மத்தியில் அக்கறையுடன் செயலாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வையே இறைவனின் கோவிலாக மாற்றினோமென்றால், நம்மிலும் நம் சாட்சியத்திலும் பிறர் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்துடன் இணைந்து, நாம் நிறைவேற்றும் திருப்பலிகள், நம்மை இறைவனின் திருக்கோவிலாக வளர உதவுகின்றன என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.