2015-03-09 15:44:00

ஆயுத இறக்குமதியில் சவுதி அரேபியா முதலிடத்தில்


மார்ச்,09,2015. சவுதி அரேபியாதான் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு என்று, நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பான உலக அளவிலான புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

ஆயுத இறக்குமதியில் இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், இதுவரை ஐந்தாவது இடத்தில் இருந்த சீனா, இப்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த IHS என்ற சந்தைப் புலனாய்வு நிறுவனம் கூறுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இராணுவத் தளவாட வியாபாரம், 13 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலும், ஆசிய பசிபிக் பகுதியிலும் மோதல்கள் அதிகரித்துள்ள காரணத்தினாலும், வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் இராணுவ விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் இந்த வியாபார அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து உள்ள நிலையில், அடுத்த நிலைகளில் இரஷ்யாவும் பிரான்ஸும் உள்ளன.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.