2015-03-07 16:04:00

பாகிஸ்தானில் இந்துக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம் மாணவர்கள்


மார்ச்,07,2015. கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில் உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய இந்துக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்தனர்.

தேசிய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பிற மதங்களுடன் நல்லிணக்கத்தை தழைக்கச் செய்வதற்கும், பல்வேறு மத, இனப் பிரிவினர் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இமாம்பர்காவில் ஷியா பிரிவினருக்கு அரவணைப்பாக நின்று நாங்கள் ஆதரவு காட்டிய போது டாக்டர் ஜெய்பால் சாப்ரியா எங்களோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுத்தார். பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளோம் என்று அந்த கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி பவாத் ஹசன் கூறினார்.

இந்து கோயில்கள் அவமரியாதைக்கு உள்ளாகின்றன. கட்டாயப்படுத்தி விருப்பத்துக்கு மாறாக பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். கலாச்சாரம், மத நடவடிக்கைகள் நசுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்துக்களுக்கு துணை நிற்பதுதான் நியாயம். நாங்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. சமூகம் மாற வேண்டும். அந்த மாற்றத்தில் நாமும் அங்கம் வகிக்கவேண்டும் என்று ஹசன் அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.