2015-03-06 14:33:00

Neocatechumenal Way உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பாராட்டு


மார்ச்,06,2015. திருஅவையில் தேங்கிக் கிடக்கும் நீரை நாம் விரும்பவில்லையென்றால், நாம் நமது மேய்ப்புப்பணியை மறைபோதக மேய்ப்புப்பணிக்கு எடுத்துச் செல்ல வேண்டும், இதைத்தான் Neocatechumenal Way உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவை அறியாதவர்களுக்கும், அறிந்தவர்களுக்கும் இறைவார்த்தையை எடுத்துச்செல்லும் Neocatechumenal Way என்ற கத்தோலிக்க பக்த இயக்கத்தின் ஏறக்குறைய ஏழாயிரம் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத் திருஅவைக்கு இறைபராமரிப்பின் உண்மையான கொடையாக இந்த இயக்கத்தினர்   உள்ளனர் என்று பாராட்டினார்.

உலகின் நாடுகளுக்கு மறைப்பணியாற்றுவதற்கு இதன் உறுப்பினர்களை அனுப்பும் நிகழ்வாக இச்சந்திப்பு இடம்பெற்றது. பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, வியட்நாம், பாப்புவா நியு கினி கொசோவோ, உக்ரைன் உட்பட தங்களுக்குக் குறிக்கப்பட்ட நாடுகளுக்கு மறைப்பணியாற்றச் செல்லும் குடும்பங்கள் இச்சந்திப்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இவர்களின் இந்த மறைப்பணி அழைப்பை உறுதிசெய்து, இதற்கு ஆதரவளித்து இவர்களின் தனிவரத்தை தான் ஆசிர்வதிப்பதாகவும் உரைத்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கடவுள் தன்னை அன்புகூருகிறார் மற்றும் அன்பு இயலக்கூடியதே என்பதை, இக்காலத்தில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் மனிதர் உணரவேண்டியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல புறநகர்ப் பகுதிகள், ஆசியாவின் பல நகரங்கள் ஆகியவற்றில் எவ்வளவு மக்கள் தனிமையிலும், துன்பத்திலும், கடவுளைவிட்டுத் தொலைவிலும் வாழ்கின்றனர், இம்மக்களுக்கு இக்கிறிஸ்தவ இயக்கத்தின் மறைப்பணிகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளன என்று கூறினார் திருத்தந்தை.

இந்த இயக்கத்திலுள்ள கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்களின் இடங்களைவிட்டு தூர இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்கும் துணிச்சலைப் பாராட்டிய திருத்தந்தை, இறைவார்த்தை, திருவழிபாடு, சமூகம் ஆகிய திருஅவையின் மூன்று கூறுகளை இந்தப் பக்த இயக்கத்தினரும் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டார்.

Neocatechumenal Way என்ற இயக்கத்தினர், திருஅவைக்குப் பெரிய அளவில் நன்மை செய்து வருகின்றனர் எனவும், தனது மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவது புனித பேதுருவின் வழிவருபவரின் பணி என்பதால், இவ்வியக்கத்தின் கிறிஸ்தவக் குடும்பங்களைத் தானும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பில் குடும்பங்கள் தங்களின் கரங்களில் சிலுவைகளை ஏந்தியிருக்க, திருத்தந்தை 33 அருள்பணியாளர்களுக்கு சிலுவைகளை வழங்கினார்.

Francisco "Kiko" Argüello, Carmen Hernández ஆகிய இருவரும் மத்ரித்தில் சேரிகளில் நற்செய்தி அறிவித்ததன் பயனாக, 1964ம் ஆண்டில் Neocatechumenate பக்த இயக்கம் உருவானது. இது 2008ம் ஆண்டில் திருப்பீடத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த இயக்கம், ஒவ்வொரு பங்கிலும் 20 முதல் 50 பேரை உள்ளடக்கிய சமூகமாகச் செயல்பட்டு வருகின்றது. இன்று உலகெங்கும் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவ சமூகங்கள் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.