2015-03-04 15:09:00

திருத்தந்தை-துன்புறுவோருடன் இணைவது ஆயர்களின் முக்கிய கடமை


மார்ச்,04,2015 ஆயர்கள் என்ற முறையில், திருவிருந்து இடம்பெறும் மேசையைச் சுற்றி, மக்களை நாம் ஒன்று சேர்க்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

Focolare என்ற இயக்கத்தின் நண்பர்கள் என்றழைக்கப்படும் ஆயர்கள், மார்ச் 2ம் தேதி முதல், 6ம் தேதி முடிய உரோம் நகருக்கருகே அமைந்துள்ள Castel Gandolfo எனுமிடத்தில் கூடிவந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் 60 ஆயர்களை, இப்புதன் காலை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பால் அரங்கத்தின் ஓரறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையையும், திருவிருந்தையும் மையமாகக் கொண்டு, இறைமக்களை இணைப்பது ஆயர்களின் முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.

இறைவனின் வார்த்தையையும், உடலையும் பகிர்ந்தளிக்காமல், மக்களைக் கூடிவரச் செய்வது வெறும் நட்புணர்வில் கூடிவரும் சமுதாயமாக மட்டுமே மாறமுடியும் என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக் காட்டினார்.

திருஅவையின் துன்புறும் அங்கங்களாக தற்போது விளங்கும் சிரியா, ஈராக், உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஆயர்களை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, துன்புறும் மக்களோடு தங்களையே அடையாளப்படுத்துவது ஆயர்களின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்தினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் ஆகியவை, Focolare இயக்கத்தின் முக்கிய கொள்கைகளாக விளங்குவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.

Focolare இயக்கத்தின் நண்பர்கள் என்றழைக்கப்படும் ஆயர்களில், ஈராக், சிரியா, உக்ரைன், ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், இப்புதன் பிற்பகலில் செய்தியாளர்களுடன் ஒரு சிறப்புப் பகிர்வில் ஈடுபட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.