2015-03-04 14:55:00

கடுகு சிறுத்தாலும் – சாதிப்பதற்கு மனவுறுதி முக்கியம்


புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி ஒருவரிடம், திறமை வாய்ந்த வில்வித்தைக்கார இளைஞர் ஒருவர் சென்று தன்னோடு போட்டியிட முடியுமா என சவால் விட்டார். போட்டிகள் ஆரம்பமாயின. இருவரும் பல போட்டிகளில் வென்று முன்னேறினர். தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய்ப் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர். அருமை என்று பாராட்டிய துறவி, ‘என்னுடன் ஓர் இடத்துக்கு வா. அங்கு வந்து உன்னால் வெற்றிபெற முடிகின்றதா என்று பார்ப்போம்’என்றார். அடக்கமுடியாத ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர். ஓர் உயர்ந்த மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளிடையே நடந்து செல்வதற்காகப் போடப்பட்டிருந்த மிகச் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கொஞ்சம் சறுக்கினாலும் மரணம் நிச்சயம். தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார். அடித்து விட்டு, ‘இப்போது உன் முறை’என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டார். இளம் வீரருக்கோ கை, கால்கள் நடுங்கின. கனியைச் சரியாக அம்பால் எய்ய முடியவில்லை. அப்போது அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, ‘உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை’ என்றார்.

மனவுறுதி இல்லாதவரின் உள்ளம், குழம்பிய கடலுக்கு நிகரானது என்றார் மகாகவி பாரதி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.