2015-03-04 15:31:00

ஆசியாவில் கிறிஸ்தவ மதம் ஓர் அன்னிய மதமாகவே கருதப்படுகிறது


மார்ச்,04,2015 நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் ஆசியாவின் சில நாடுகளில், கிறிஸ்தவ மதமானது, ஆசிய கலாச்சாரத்துடன் இணையாத ஓர் அன்னிய மதமாகவே கருதப்படுகிறது என்று ஆசிய கர்தினால்களில் ஒருவரான லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

"50 ஆண்டுகளுக்குப் பின் Gaudium et Spes ஏட்டிற்கு ஆசியாவில் வரவேற்பு" என்ற தலைப்பில், அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் இத்திங்களன்று வழங்கிய உரையில், மணிலா பேராயர் கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.

"கலாச்சாரங்களின் சந்திப்பு" என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தாக்லே அவர்கள், ஆசியாவின் பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராய் இருப்பதால், அவர்களைப் பற்றிய புரிதல் இன்னும் பெரும்பான்மை மக்களைச் சென்றடையவில்லை என்று விளக்கினார்.

வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆசிய நாடுகளில் மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் கத்தோலிக்கத் திருஅவை முழு மூச்சுடன் ஈடுபட்டாலும், அப்பணிகளை சந்தேகக் கண் கொண்டு நோக்குவது அரசுகளின் கண்ணோட்டமாக உள்ளது என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் :  CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.