2015-03-04 15:06:00

அமைதி ஆர்வலர்கள் : 1974ல் நொபெல் அமைதி விருது-பாகம் 2


மார்ச்,04,2015. Eisaku Sato, Seán MacBride ஆகிய இருவருக்கும் 1974ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. Eisaku Sato (1901-1975) அவர்கள், ஜப்பான் வரலாற்றில், அதிக காலம் பிரதமராகப் பணியாற்றியவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜப்பான் நாடு தனது மிகப்பெரும் பொருளாதார சக்தியை, பன்னாட்டுச் சூழலில் அரசியல் சக்தியாக உயர்வடையச் செய்தது. ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride) அவர்கள், அயர்லாந்து நாட்டு அரசில் அமைச்சராகவும், பன்னாட்டு அளவில் சிறப்புமிக்க அரசியல்வாதியாகவும், IRA என்ற அயர்லாந்து புரட்சிப்படையின் முன்னாள் தலைமை அதிகாரியாகவும் விளங்கியவர். மனித உரிமை ஆர்வலரான இவர், ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஐரோப்பிய அவை,  ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம் உட்பட இருபதாம் நூற்றாண்டின் பல பன்னாட்டு நிறுவனங்களைத் தோற்றுவித்தவர் அல்லது அவற்றில் உறுப்பினராக இருந்தவர்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ள மெக்ப்ரைடு, 1963ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை அனைத்துலக சட்ட வல்லுனர்கள் அவையின் பொதுச் செயலராகவும், ஜெனீவாவிலுள்ள அனைத்துலக அமைதி அவையின் தலைவராகவும்(1974–1985) பணிபுரிந்துள்ளார். ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவித் தலைவராகவும், ஐரோப்பிய அவையின் அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார். ஆப்ரிக்க ஒன்றிய நிறுவனத்தின்(OAU) சட்டங்களையும், கானா நாட்டின் முதல் அரசியல் அமைப்பையும் தொகுத்தவர் ஷான் மெக்ப்ரைடு. ஐ.நா.வில் உதவிப் பொதுச்செயலர், ஐ.நா.பொது அவையின் தலைவர், ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம், ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனம், ஐ.நா.வின் நமீபியாவுக்கான அவை ஆகியவற்றின் உயர் இயக்குனராகவும், யுனெஸ்கோவின் சமூகத்தொடர்புத் துறை பிரச்சனைகள் பற்றிய பன்னாட்டு ஆய்வுக் குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், அநீதிக்கு எதிரான போராட்டத்தில் உலகின் மனசாட்சியை ஒன்றுதிரட்டிய மனிதர் என்று பாராட்டி ஷான் மெக்ப்ரைடு அவர்களுக்கு 1974ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இது தவிர, 1975-76ம் ஆண்டின் லெனின் அமைதி விருது, 1980ல் யுனெஸ்கோ சேவை பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார் ஷான் மெக்ப்ரைடு.

ஷான் மெக்ப்ரைடு அவர்கள், 1904ம் ஆண்டு சனவரி 26ம் தேதி பிரான்சில், இராணுவ அதிபர் John MacBride, Maud Gonne தம்பதியருக்குப் பிறந்தவர். அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சி முடிவடைய வேண்டுமென்பதை வலியுறுத்தி 1916ம் ஆண்டில் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா வாரத்தில் அயர்லாந்தில் இடம்பெற்ற உயிர்ப்புப் புரட்சிக்குப் பின்னர் ஷான் மெக்ப்ரைடு அவர்களின் தந்தை தூக்கிலிடப்பட்டார். அதுவரை பாரிசில் வாழ்ந்துவந்த மெக்ப்ரைடு, அதற்குப் பின்னர் அயர்லாந்தில் வாழ்வைத் தொடங்கினார். 1919ம் ஆண்டில், தனது 15வது வயதில் அயர்லாந்து தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பில் சேர்ந்து, அயர்லாந்து விடுதலைப் போரில் ஈடுபட்டார். 1921ம் ஆண்டின் ஆங்லோ-ஐரிஷ் உடன்படிக்கையை எதிர்த்தார். அதனால் அயர்லாந்து உள்நாட்டுப்போரின்போது அயர்லாந்து சுதந்திர அரசால் கைது செய்யப்பட்டார். 1924ல் விடுதலையான பிறகு, டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் மெக்ப்ரைடு. அதோடு, IRA அமைப்பில் தனது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தார். Éamon de Valera என்பவரின் செயலராக சிறிது காலம் பணிபுரிந்தார். அச்சமயத்தில் அவரோடு உரோம் நகருக்கு வந்து பல்வேறு பிரமுகர்களைச் சந்தித்தார் மெக்ப்ரைடு.

1925ம் ஆண்டு சனவரியில் தனது 21வது பிறந்த நாளில், அவரைவிட நான்கு வயது மூத்தவரும், இவரையொத்த அரசியல் கருத்துக்கள் கொண்டவருமான Catalina "Kid" Bulfin என்பவரை மணந்தார் மெக்ப்ரைடு. 1927ம் ஆண்டில் IRA அமைப்பின் இரகசியப் பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் இவர். இலண்டனிலும், பாரிசிலும் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர், 1927ல் டப்ளினுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டு, பல ஆதரவாளர்களின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டார். 1931ல் சுதந்திர அயர்லாந்து என்ற இயக்கத்தையும் தொடங்கினார். 1950களில், 1960களில், 1970களில் உலக அளவில், மனித உரிமைகளுக்காக அயராது உழைத்தவர் மெக்ப்ரைடு. 1958ல் அயர்லாந்து குடியரசில், சந்தேகத்தின்பேரில் நூற்றுக்கணக்கான IRA உறுப்பினர்கள் எவ்வித விசாரணையுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றவர்   இவர். 1956ம் ஆண்டின் புடாபெஸ்ட் கிளர்ச்சிக்குப் பின்னர், பிரித்தானியாவை மையமாகக் கொண்டு, விசாரணைகளைக் கண்காணிப்பதற்கென வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவை இவர் உருவாக்கினார். மனசாட்சிக் கைதிகள் விண்ணப்ப அறக்கட்டளை உட்பட மனித உரிமைகள் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனங்களில் உயிர்த்துடிப்புள்ள உறுப்பினராகச் செயலாற்றியவர் ஷான் மெக்ப்ரைடு.

1980களில் அணு ஆயுதப் போருக்கு எதிராகச் செயல்படுவதற்கு வழக்கறிஞர்களைத் தூண்டிவிட்டவர் மெக்ப்ரைடு. லெபனான் நாட்டை இஸ்ரேல் ஆக்ரமித்திருந்தபோது, இஸ்ரேல் அனைத்துலக சட்டத்தை மீறுவது குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிடும் அனைத்துலக குழுவின் தலைவராக 1982ல் செயல்பட்டார் இவர். மெக்ப்ரைடு கொள்கைகள் என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை 1984ல் பரிந்துரைத்தார் இவர். வட அயர்லாந்தில் வேலைக்கு அமர்த்துபவர்களால் உரோமன் கத்தோலிக்கர் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதே இத்திட்டம். சாதுவாகப் பேசுபவர் இவர் எனப் பெயர் பெற்ற ஷான் மெக்ப்ரைடு, 1988ம் ஆண்டு சனவரி 15ம் தேதி தனது 84வது வயதில் காலமானார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.