2015-03-03 15:03:00

நன்மை செய்ய கற்றுக்கொள்பவரை கடவுள் தாராளமாக மன்னிக்கிறார்


மார்ச்,03,2015. நன்மை செய்யக் கற்றுக்கொள்பவர்களை கடவுள் தாராளமாக மன்னிக்கிறார், ஆனால், வெளிவேடக்காரர் மற்றும் போலியான புனித வாழ்வு வாழ்பவர்களை கடவுள் மன்னிப்பதில்லை என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்மை செய்வதைவிட புனிதர்களாகக் காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை எடுக்கும் போலிப் புனிதர்களைவிட, தங்களின் கடந்தகாலப் பாவங்களை விடுத்து, அதிகமாக நன்மை செய்யக் கற்றுக்கொண்டு, தூய வாழ்வு வாழும் பாவிகளை கடவுள் விரும்புகிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தீமை செய்தலை விட்டொழியுங்கள், நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், திக்கற்றோருக்கும், கைம்பெண்ணுக்கும் உதவுங்கள் என்று கடவுளிடமிருந்து நேரிடையாக வரும் எசாயா அறிவுரைப் பகுதியை(எச.1,16-20) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கைவிடப்பட்ட வயதானவர்கள், பள்ளிக்குச் செல்லாத சிறார், சிலுவை அடையாளம் போடத் தெரியாதவர்கள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குவர் என்று கூறினார்.

மனமாற்றத்துக்கு இன்றியமையாத அழைப்பு இது, சரியானதைச் செய்வதன்மூலம் நாம் மனம் மாற முடியும் என்றுரைத்த திருத்தந்தை, துவைக்கப்போட்டு துணியில் கறையை நீக்குவது போன்று இதயத்தின் கறையை அகற்ற முடியாது, ஆனால் நன்மை செய்து இதயத்தின் அழுக்கை அகற்ற முடியும் என்றும் கூறினார்.

எவ்வாறு நன்மை செய்வது என்பதையும் விளக்கிய திருத்தந்தை, நீதியைத் தேடுதல், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்து ஊக்குவித்தல், கைவிடப்பட்டவர்களுக்காகப் பரிந்து பேசுதல், கைம்பெண்ணுக்காக வழக்காடுதல், மனித சமுதாயம் வேதனைப்படும் இடத்தில் நீதி வழங்குதல் போன்றவற்றைச் செய்வதாகும், இதனால் நம் இதயமும் சுத்தப்படுத்தப்படும் என்று கூறினார்.

தூய்மைப்படுத்தப்படும் இதயத்துக்கு கடவுளின் மன்னிப்பும் உறுதி செய்யப்படுகின்றது, தங்களின் அயலாரை தெளிவான செயல்களால் அன்புகூருபவரின் பாவங்களை கடவுள் கணக்கில் வைப்பதில்லை என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

இந்தப் பாதையைத் தேர்ந்துகொண்டால், கடுஞ்சிவப்பாய் இருக்கும் உங்கள் பாவங்கள் உறைந்த பனிபோல வெண்மையாகும் என்கிறார் ஆண்டவர்; இது மிகைப்படத் தெரிந்தாலும் இதுவே உண்மை, ஆண்டவர் தமது மன்னிப்பு எனும் கொடையைத்  தாராளமாக நமக்குத் தருகிறார், நம்மை மன்னிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.