2015-03-03 15:24:00

உலகின் புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்கு எதிராக பிலிப்பீன்ஸ்


மார்ச்,03,2015. உலகளாவிய புறக்கணிப்புக் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களுக்கு விடுத்துவரும் அழைப்பை செயல்படுத்தும் விதமாக, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை இத்தவக்காலத்தில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் நிறுவனத் தலைவர் பேராயர் Rolando Tria Tirona அவர்கள் இம்முயற்சி பற்றிக் கூறுகையில், ஏழைகளின் குரலுக்குச் செவிமடுப்பது, சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது ஆகிய இரண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விளக்கினார்.

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு மக்களைத் தயாரிக்கும் ஒரு முயற்சியாக, ஏழைகள் மற்றும் நசுக்கப்பட்ட மக்களின் நெருக்கடிநிலைகளைச் சிந்திப்பதற்குத் தலத்திருஅவை விசுவாசிகளைத் தூண்டி வருகின்றது என்றும் பேராயர் Tirona அவர்கள் கூறினார்.

மேலும், கருக்கலைப்பு நடவடிக்கைகளைத் தடைசெய்து, குடும்ப வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில், பிலிப்பீன்ஸ் அரசு-சாரா அமைப்பு ஒன்று இம்மாதம் 6 முதல் 8 வரை கருத்தரங்கு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.