2015-03-02 16:12:00

திருத்தந்தை - சிரியா, ஈராக் வெனிசுவேலாவில் அமைதி வேண்டும்


மார்ச்,02,2015 சிரியா, ஈராக் வெனிசுவேலா ஆகிய நாடுகளில், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் மக்களை மறந்துவிடாமல், அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்ற அழைப்பை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறை, கடத்தல், துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு கிறிஸ்தவர்கள் உள்ளாவது குறித்த செய்திகள், சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "சகிக்கமுடியாத இந்தக் கொடுஞ்செயல்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நாம் தொடர்ந்து செபிக்கிறோம் என்பதையும், துன்புறுவோரை நாம் மறக்கவில்லை என்பதையும் இப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் உணரட்டும்" என்றும் கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதி வாழ் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு செபங்களை எழுப்பியத் திருத்தந்தை, தொடர்ந்து, தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் பதட்டநிலைகள் குறைவதற்குச் செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார்.

அனைவரும் வன்முறைகளை மறுப்பதோடு, ஒவ்வொரு மனிதரின் மாண்புக்கான மதிப்பைக் காட்டுமாறும் தன் அழைப்பை முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.