2015-02-28 15:29:00

திருத்தந்தை-பணம் மனிதரின் சேவைக்கு உரியதாய் இருக்க வேண்டும்


பிப்.28,2015. பணம் மனிதரின் சேவைக்கு உரியதாய் இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் பணம் மனிதரைக் கட்டுப்படுத்தினால் அழிவைக் கொண்டுவரும் என்று இத்தாலிய கூட்டுறவு சங்கத்தினரிடம் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் ஏறக்குறைய ஏழாயிரம் உறுப்பினர்களை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மனிதர் தெரிவுசெய்வதை ஆணையிடும் தெய்வச்சிலையாக பணம் மாறும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தார்.

மனிதர் தங்களின் முழுத்திறமையில் எவ்வாறு வளர்வது என்பதை அறிந்திருக்கும் பொருளாதாரத்தின் புதிய தரம் இக்காலத்தில் நமக்குத் தேவைப்படுகின்றது என்றும், உள்ளூரிலும், பொதுச் சமூகங்களிலும் வலிமையற்றவர்களின் சார்பாக நின்று அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பவர்களாகத் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கூட்டுறவு அமைப்பில் 1+ 1= 3 என்று சொன்னால் அது தோல்வியே என்று கூட்டுறவுச் சங்கத்தின் உண்மை நிலைகள் பற்றி தொகுத்து வழங்கிய திருத்தந்தை, இக்காலத்தில் வேலையின்றி இருப்போருக்கு வேலைவாய்ப்பை அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அநீதியான முறையில், குறைந்த ஊதியத்துக்கு பலமணி நேரங்கள் வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து கண்டித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 600 யூரோக்களுக்கு 11 மணி நேரம் வேலை செய்ய விருப்பமில்லாதவர்களை ஒதுக்கித்தள்ளும் நிலை குறித்து குறிப்பிட்டார்.

சட்டத்துக்குப் புறம்பே வேலைக்கு ஆள் அமர்த்துவதற்கு இவ்வுலகில் காணப்படும் பசி பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்று வீட்டுவேலை செய்வோரில் எத்தனைபேருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

ஏறக்குறைய 800 அருள்பணியாளர்கள் மற்றும் பங்குத்தளங்களால் இத்தாலிய கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இக்கூட்டமைப்பின்  கிறிஸ்தவ விழுமியங்கள் எல்லாருக்கும் உரியவை என்பதையும் எடுத்துச் சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.