2015-02-28 14:21:00

தவக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


இருவாரங்களுக்கு முன், ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட ஒரு வீடியோ தொகுப்பு, உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது. லிபியா கடற்கரையில் 21 கிறிஸ்தவ இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு கொலையுண்ட காட்சி, அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இக்கொடூரத்தைக் கண்ட உலக அரசுகளில் சில, பழிக்குப் பழி என்ற பாணியில் பேசி, செயலாற்றி வருகின்றனர். ஆனால், இந்தக் கொடூரத்தில் தன் இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது இளைய மகனும் கூறிய வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகின்றன.

ஒருவாரத்திற்கு முன்னர் எகிப்து தொலைக்காட்சியில் Beshir என்ற 21 வயது இளைஞன் வழங்கிய பேட்டியொன்று வெளியானது. Beshirன் இரு அண்ணன்களான, Bishoy Estafanos Kamel என்ற 25 வயது இளையவரும், அவரது தம்பி Samuel Estafanos Kamel என்ற 23 வயது இளையவரும் கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர். இந்த நிகழ்வைக் குறித்தும், ISIS தீவிரவாதிகள் குறித்தும் இளையவர் Beshir பேசுகையில், "என் அண்ணன்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை, இனி தலைநிமிர்ந்து இவ்வுலகிற்குச் சொல்வேன். என் அண்ணன்கள் கொலையுண்டதை வீடியோ படமாக ஊடகங்களில் வெளியிட்ட ISIS குழுவினர், எதிர்பாராத வகையில் ஒரு கொடையை எங்களுக்கு அளித்துள்ளனர்" என்று Beshir கூறியது ஆச்சரியமாக இருந்தது.

இளையவர் Beshir தொடர்ந்து பேசினார்: "அந்த வீடியோவின் ஒலிப்பதிவை மௌனமாக்காமல், ISIS குழுவினர், அப்படியே வெளியிட்டதால், என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் சொன்னது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. ISIS குழுவினர் நினைத்திருந்தால், அந்த ஒலியை மௌனமாக்கிவிட்டு, வெறும் வீடியோவை மட்டும் அனுப்பியிருக்கலாம். ஆனால், ஒலிப்பதிவை மாற்றாமல், அதை அப்படியே அனுப்பியதற்காக அவர்களுக்கு நன்றி" என்று சொன்ன Beshir, இந்த வீடியோவால் தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் எடுத்துரைத்தார். "கடந்த சில நாட்களாக, எங்கள் கிராமம் முழுவதும், மக்கள் ஒருவர் ஒருவரைப் பாராட்டி, நன்றிசொல்லி வருகிறோம்" என்று Beshir கூறினார்.

இளையவர் Beshir அந்த நேர்காணலில் தன் தாயைக் குறித்து சொன்னதும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. Bishoy, Samuel என்ற இரு மகன்களையும் பறிகொடுத்த தன் தாயிடம், "அம்மா, ISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?" என்று Beshir கேட்டபோது, அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை என் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று கூறியதாக, Beshir தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

ISIS தீவிரவாதிகள், 21 இளையோரின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த கொடூரத்தையும், இந்தத் தொலைக்காட்சி நிகழ்வையும் ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணங்கள் உண்டு. பெரும்பாலான மதங்களில் மிருகங்களை இறைவனுக்குப் பலி செலுத்தும்போது, அவற்றின் கழுத்தை அறுத்துக் கொல்வது வழக்கம். இந்த வழக்கத்தை மறைமுகமாக நினைவுறுத்தும் வண்ணம், ISIS தீவிரவாதிகள், மனிதர்களின் கழுத்தை அறுத்துக் கொல்லும் வீடியோக்களை கடந்த சில மாதங்களாக ஊடகங்கள் வழியே வெளியிட்டு வருகின்றனர். வெறுப்புடன் அவர்கள் மேற்கொண்டுவரும் அந்தக் கொடூரத்திலும் நன்மையைக் கண்டு, தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் தாயும், இளையவர் Beshirம், ‘விசுவாசத்தின் தந்தை’ என்று போற்றப்படும் ஆபிரகாமை நம் நினைவுக்குக் கொணர்கின்றனர்.

ஆபிரகாமின் வாழ்வு, அமைதியான வகையில் அமையவில்லை. அவர் மனதில் வேர்விட்டு வளர்ந்திருந்த விசுவாசத்திற்கு சவாலாக பல நிகழ்வுகள் அவர் வாழ்வில் தொடர்ந்தன. அந்தச் சவால்களின் சிகரமாக, அவர் விசுவாசத்தின் ஆணிவேரையே ஆட்டிப்படைக்கும் ஒரு சவால், கடவுளிடமிருந்து வந்ததை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. (தொடக்க நூல் 22: 1-2, 9-13, 15-18)

இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100. ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.

இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை. மலைகள், இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற பாரம்பரியத்தில் வளர்ந்தவர் ஆபிரகாம். ஆபிரகாமுக்கு இறைவன் காட்டிய அந்த மலையில், தனக்கு நிறைவைத் தரும் இறைவனைச் சந்திப்பதற்குப் பதில், தன்னிடம் உள்ளதைப் பறித்துச்செல்ல வரும் இறைவனைச் சந்திக்கப் போவது, ஆபிரகாமின் விசுவாசத்திற்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.

ஒரு நொடியில் தலைவெட்டப்பட்டு உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில், அல்லது, மாதக் கணக்கில் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அந்தச் சித்ரவதையை ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட பலியை வீட்டுக்கருகில், ஓரிடத்தில், ஆபிரகாம் நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார். தன் கையால் கழுத்தை அறுத்து, தானே கொல்லப்போகும் மகனை கரம் பிடித்து அழைத்துச் சென்ற ஆபிரகாமின் மனம், அந்த மூன்று நாட்கள், அதாவது, 72 மணி நேரங்கள், அடைந்த சித்ரவதையை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல... அவர்கள் மலையடிவாரத்தை அடைந்ததும், சிறுவன் ஈசாக்கின் தோள்மீது ஆபிரகாம் விறகுக் கட்டைகளைச் சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு ஆர்வமாக மலைமீது ஏறுகிறான். போகும் வழியில்,  தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அச்சிறுவனின் கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். உண்மையான பதிலைச் சொல்லமுடியாமல், ஆபிரகாம் "கடவுளே பார்த்துக்கொள்வார்" என்று ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பினார்.

மகனைப் பலிதருவது என்பதே, கொடூரக் கட்டளை. அக்கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற முடியாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. ஆன்மீக விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு, பல வழிகளில் கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. ஆபிரகாமும் ஈசாக்கும் மேற்கொண்ட மூன்றுநாள் பயணத்தைப் போல, இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்ததுபோல், இயேசு சிலுவை சுமந்தார். ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் ஆபிரகாம் தவித்தார். பாடுகளின்போது இயேசு கேட்ட கேள்விகளுக்குத் தந்தை பதில் ஏதும் தரவில்லை... இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும் இயேசுவின் பாடுகளின்போது வேதனை அடைந்தார் என்பது ஆன்மீக விரிவுரையாளர்கள் தரும் ஒரு விளக்கம்.

மகனைப் பலிகேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். லிபியா கடற்கரையில் தன் இரு மகன்களை பலிகொடுத்த தாயும், அண்ணன்களை இழந்த இளையவர் Beshirம் அந்த வேதனைத் தீயில் புடமிடப்பட்டு, இறை அனுபவம் பெற்றுள்ளனர் என்பதை Beshir அளித்த பேட்டியில் நாம் உணரலாம். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்கத் தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.

இறை அனுபவம், எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், நானும் கடவுளும் என்று, அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு உருமாறிய நிகழ்வின் கடைசிப் பகுதி நமக்குச் சொல்லித்தருகிறது. "நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு, மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்பதே.

அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? ‘இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி, நம் பணியைத் தொடர்வோம்’ என்று இயேசு கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்களும், கோவில்களும் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறை அனுபவம் பெற்ற அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.

ஆபிரகாமுக்கு இறைவன் அளித்த சவாலைப் போல, இன்று உலகில் பலர் தங்கள் நெருங்கிய உறவுகளை பலச் சூழல்களில் பலிகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இறைவனை நம்பி தன் மகனைப் பலிதர துணிந்த ஆபிரகாமைப் போல, தன் மகனின் கொடூரப் பலியைக் கண்டபின்னரும், அன்பையும், மன்னிப்பையும் சுமந்து வாழும் எகிப்து நாட்டின் தாயைப் போல, தன் அண்ணன்களின் மறைசாட்சிய மரணத்தால் விசுவாசத்தில் உறுதி அடைந்துள்ள இளையவர் Beshirஐப்போல, உலகினர் அனைவரும் நம்பிக்கையையும், மன்னிப்பையும் வளர்க்கும் வழிகளைக் காண இறைவனின் வரங்களை வேண்டுவோம்.

ISIS தீவிரவாதிகளுக்கும், இன்னும், உலகில் வெறுப்பை வளர்க்கும் பல்வேறு குழுவினருக்கும் ஒரு சிறப்புச் செபத்துடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். எகிப்து தொலைக்காட்சி பேட்டியின் இறுதியில், தொகுப்பாளர், இளையவர் Beshirஇடம் ஒரு செபம் சொல்லும்படி கேட்டதும், Beshir எவ்வித தயக்கமும் இன்றி செபித்தார்: "அன்புநிறை இறைவா, ISIS குழுவினரின் கண்களைத் திறந்தருளும். அவர்களுக்குத் தவறான பாடங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்து, தங்கள் அறியாமையிலிருந்து அவர்கள் வெளிவர உதவியருளும்" என்று இளையவர் Beshir கூறிய செபத்தில் நாமும் இணைவோம். மதங்களின் பெயரால், இறைவனின் பெயரால் மக்கள் மனதில் வெறுப்பையும், பழி உணர்வுகளையும் வளர்க்கும் அனைத்து வன்முறையாளர்களும் தங்கள் அறியாமையையும், தவறுகளையும் உணர்ந்து உண்மையை விரைவில் கண்டுணர சிறப்பாகச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.