2015-02-28 15:49:00

சிரியாவில் 15 கிறிஸ்தவர்களைக் கொலையுண்டுள்ள செய்தி உண்மையல்ல


பிப்.28,2015. சிரியாவில் ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகள் குறைந்தது 15 அசீரிய கிறிஸ்தவர்களைக் கொலை செய்துள்ளனர் என்ற செய்திகள் உண்மையல்ல என்று சிரியா கிறிஸ்தவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிகாதிகள் எனப்படும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள் தாங்கள் பிணையக் கைதிகளாக வைத்துள்ள ஏறக்குறைய 350 அசீரிய கிறிஸ்தவர்களைக் கொலை செய்யத் தொடங்கியுள்ளனர் என்று பல பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதையடுத்து, இச்செய்திகள் உண்மையல்ல எனத் தெரிவித்துள்ளார் அலெப்போ கல்தேய வழிபாட்டுமுறை பேராயர் Antoine Audo.

al-Hasakahல் கல்தேயக் கிறிஸ்தவர்களின் தலைவராகப் பணியாற்றும் அருள்பணியாளர் Nidala அவர்களைத் தான் தொடர்பு கொண்டு பேசியபோது, கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்படும் செய்தி உண்மையல்ல என்று கூறியதாக, ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் பேராயர் Antoine Audo.

மேலும், சிரியா கத்தோலிக்கப் பேராயர் Jacques Behnan Hindo அவர்களும், உண்மையென்று கூறமுடியாத வதந்திகளைப் பரப்புவது தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம் என்று, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

Khabur ஆற்றுப் பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து, ஜிகாதிகள் கடத்தியுள்ள ஆசீரிய மற்றும் கல்தேயக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 350 என்று சொல்லலாம் எனவும் கூறியுள்ளார் பேராயர் Hindo.

ஆயினும், சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் குறித்து குறை கூறியுள்ள பேராயர் Hindo, அனைத்துலக செம்பிறைச் சங்கம் இவ்வாரத்தில் 125 உணவுப் பொட்டலங்களை விநியோகித்தது என்று தெரிவித்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.