2015-02-26 15:28:00

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்


பிப்.26,2015 மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளை தானம் பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பதாக மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் துவங்கியதிலிருந்து தற்போதுவரை, 19 பேர் தமிழ்நாட்டில் உறுப்புதானம் செய்திருக்கின்றனர். இந்தியாவில் ஒரே மாதத்தில் இத்தனை பேர் உறுப்புதானம் செய்தது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பாக, ஒரே மாதத்தில் 17 பேர் உறுப்புதானம் செய்ததுதான் அதிக அளவு எண்ணிக்கையாக இருந்தது.

தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உறுப்புகளைப் பெறுவது என்பது முறைப்படி அமலுக்கு வந்தது. அப்போதிலிருந்து இப்போதுவரை, 587 பேர் 3231 உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர்.

உறுப்புகளைத் தானம் அளிக்கும் வீதம், இந்தியாவைப் பொருத்தவரை, கோடியில் ஒருவர் என்று இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த எண்ணிக்கை பத்து லட்சம் பேருக்கு 3.3 பேர் என்று இருந்துவருகிறது.

தமிழகத்தில் இருக்கும் வெளிப்படைத் தன்மையும் அரசின் முயற்சிகளும் இதற்குக் காரணம் என்கிறார் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான மருத்துவர் அமலோற்பவநாதன்.

"மேலும், தமிழக மக்கள் இந்த விடயத்தில் இயல்பாகவே தானம் அளிக்கும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்; தவறு ஏதும் நேராமல், சரியான நபர்களுக்கு உறுப்புகள் சென்று சேர்கிறது என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், தன் மகனின் உறுப்புகளைத் தானம் செய்ததது தமிழகம் முழுவதும் பெரும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.