2015-02-26 15:39:00

உரையாடலை வளர்க்க எத்தியோப்பியத் திருஅவை சக்திவாய்ந்த கருவி


பிப்.26,2015 எண்ணிக்கை அளவில், எத்தியோப்பா நாட்டில், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரே என்றாலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய உரையாடலையும், ஒருங்கிணைப்பையும் வளர்ப்பதில் தலத்திருஅவை சக்திவாய்ந்த ஒரு கருவியாகச் செயலாற்றுகிறது என்று அந்நாட்டின் கர்தினால் ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 14ம் தேதியன்று திருஅவையின் புதிய கர்தினால்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற Addis Ababaவின் பேராயர் கர்தினால் Berhaneyesus Demerew Souraphiel அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

எத்தியோப்பிய நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும், தனக்கு வழங்கிய கர்தினால் பொறுப்பு வழியாக, இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை மதிப்பளித்துள்ளார் என்று குறிப்பிட்ட கர்தினால் Souraphiel அவர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவுக்கு, எத்தியோப்பியா ஓர் எடுத்துக்காட்டான நாடாகத் திகழ்கிறது என்று எடுத்துரைத்தார்.

எத்தியோப்பா நாட்டில் பணியாற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளுடனும், கத்தோலிக்கத் திருஅவை நலமான உறவு கொண்டுள்ளது என்பதையும் கர்தினால் Souraphiel அவர்கள், தன் பேட்டியில் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

புனித வின்சென்ட் மற்றும் கப்பூச்சியன் துறவிகளால் உருவாக்கப்பட்ட எத்தியோப்பியத் திருஅவை, தற்போது முழுமனித முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு செயலாற்றிவருகிறது என்று கர்தினால் Souraphiel அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.