2015-02-25 12:02:00

குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் பணி ஏற்பு


பிப்.25,2015. கோட்டார் மறைமாவட்டத்தில் இருந்து குழித்துறை மறைமாவட்டம் என்ற புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டு, அந்த மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்ட அருள்பணி ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள் இச்செவ்வாயன்று (பிப்.24) ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

குமரி மாவட்ட சித்திரங்கோடு மூவொரு கடவுள் மத்திய பள்ளி வளாகத்தில் இச்செவ்வாய் மாலை 28 ஆயர்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றிய ஆயர் திருநிலைப்பாட்டுத் திருப்பலிக்கு தலைமை தாங்கிய ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், ஆயர்நிலை என்பது மகிமையன்று; பணியைக் குறிக்கும் சொல், ஆள்வதைவிட பணிபுரிவதே ஆயரின் மேலான கடன் என்ற மையக்கருத்துடன் மறையுரையாற்றினார்.

புதிய ஆயரை திருநிலைப்படுத்திய வழிபாட்டுமுறையை நிறைவேற்றியதில், முதன்மை ஆயராக, கோட்டார் மறைமாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவை தலைவருமான பீட்டர் ரெமிஜியுஸும், திருநிலைப்படுத்திய இணை ஆயர்களாக மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.  

இதில் ஆயர்கள், சலேசிய சபை மாநில தலைவர் அருட்பணியாளர் ஜெயபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றிய பின்னர், குழித்துறை மறைமாவட்டம் தொடர்பான திருத்தந்தையின் ஆணையை, ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் வாசிக்க, கோட்டார் மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்பணி சாலமன் அந்த ஆணையை தமிழில் வாசித்தார்.

திருப்பலிக்குப்பின் இடம்பெற்ற வாழ்த்துக் கூட்டத்தில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் வாழ்த்திப்பேசி, குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்களுக்கு ஓய்வு நிதியாக ரூ.25 இலட்சத்துக்கான காசோலையை புதிய ஆயர் ஜெரோம்தாசிடம் வழங்கினார்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கே.டி.பச்சைமால், கே.பி.ராஜேந்திரபிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உட்பட பல அரசியல் தலைவர்கள் புதிய ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேலு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குழித்துறை புதிய மறை மாவட்ட உதய தினம் மற்றும் புதிய ஆயர் திருநிலைப்பாட்டு விழாவையொட்டி செவ்வாயன்று, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கத்தோலிக்க நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. 

ஆதாரம் : Kumari online /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.