2015-02-25 15:19:00

ஐ.நா.வில் Veto வாக்குரிமை கைவிடப்பட வேண்டும்: அம்னெஸ்டி


பிப்.25,2015 ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளும் தமது Veto வாக்குரிமையை கைவிட வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் கோரியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் இப்புதனன்று வெளியிட்டுள்ள 2014ஆம் ஆண்டுக்கான தமது அறிக்கையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெரிய அளவில் நடைபெற்ற வன்முறைகள் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் கொடுமையான அவலங்களில் சிக்கித் தவிக்கும் சூழலிலும், பெருமளவில் அராஜகங்கள் நடைபெறும்போதும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை அவமானப்படக்கூடிய வகையில் இருந்தது என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பெரிய அளவில் அட்டூழியங்கள் நடைபெறும்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் தமது Veto வாக்குரிமையை பயன்படுத்துவதை விட்டொழிக்க வேண்டும் என அம்னெஸ்டி கோரியுள்ளது.

உலகளவில் ஆயுத மோதல்களின் தன்மைகள் மாறிவரும் சூழலில் அதை எதிர்கொள்ள சர்வதேசத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தமது ஆண்டறிக்கையில் வேண்டியுள்ளது.

இஸ்லாமிய அரசு அமைப்புப் போன்ற கொடூரமான அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் ஏராளமான மக்கள் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், இந்த ஆண்டில் உலகளவில் மனித உரிமைகள் மேலும் கேள்விக்குறியாகியுள்ளது என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.