2015-02-24 15:16:00

கல்வாரியில் இயேசுவின் இறுதி வார்த்தைகள் - பகுதி - 2


கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள், பிப்ரவரி 22, கடந்த ஞாயிறன்று விடுதலை அடைந்துள்ளார். அவரது விடுதலைக்காக இறைவனுக்கு நன்றி கூறி, இன்றைய நம் விவிலியத் தேடலைத் துவக்குவோம்.

இது பிப்ரவரி மாதம். இம்மாதம் வந்து சேர்ந்த இந்த விடுதலைச் செய்தி, மற்றொரு ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடந்த விடுதலைச் செய்தியை நினைவுக்குக் கொணர்கிறது. ஆம்... 25 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1990ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, (புனித லூர்து அன்னை திருநாளன்று) தென் ஆப்ரிக்காவில், நெல்சன் மண்டேலா அவர்கள் விடுதலை அடைந்தார்.

விடுதலை அடைந்த அருள்பணி பிரேம்குமார் அவர்களையும், நெல்சன் மண்டேலா அவர்களையும் ஊடகங்கள் தேடிச் சென்றன. கடந்த எட்டு மாத அனுபவங்கள் குறித்து அருள்பணி பிரேம்குமார் அவர்களிடம், டில்லி விமான நிலையத்தில், செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டபோது, அவர் ஒரு புன்சிரிப்புடன், அந்த நாட்களைப்பற்றி தற்போது தான் பேசவிரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். தன் விடுதலையில் உதவி செய்த இறைவனுக்கு, இந்தியப் பிரதமருக்கு நன்றியையும், தாயகம் திரும்பி வந்ததில் தான் அடைந்துள்ள மகிழ்வையும் அருள்பணி பிரேம் குமார் அவர்கள் தன் பதிலாகக் கூறினார். உடலால் மிகவும் தளர்ந்து, சோர்ந்திருந்தாலும், உள்ளத்தளவில் தெளிவுடனும், அமைதியுடனும் அவர் தந்த பதிலைக் கண்டு, நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

கடந்த எட்டு மாதங்கள் அடைந்த துன்ப அனுபவங்களை, கண்ணீரோடும், கோபத்தோடும், வெறுப்போடும் அவர் பேசுவார் என்ற எதிர்பார்ப்பில், ஊடகங்கள் இன்னும் சில நாட்கள் அவரைச் சுற்றி, சுற்றி வரும் என்பதை நாம் அறிவோம். ஊடகங்களின் இந்த வேட்டையிலிருந்து, அருள்பணி பிரேம் அவர்களையும், அவரது குடும்பத்தாரையும் இறைவன் காக்கவேண்டும் என்பது நம் வேண்டுதலாக அமையட்டும். 

வெறுப்பு, கோபம் இவற்றை விளம்பரப்படுத்தும் விறுவிறுப்பான செய்திகளைத் தருவதில் ஊடகங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நாம் அறிவோம். எனவே, அருள்பணி பிரேம் அவர்களை ஊடகங்கள் துரத்துவது, புதிதல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்னர், நெல்சன் மண்டேலா அவர்கள் விடுதலை அடைந்த நாளன்றும் ஊடகங்கள் அவரைத் துரத்தின. சிறையிலிருந்து வெளியேறிய நெல்சன் மண்டேலா அவர்களின் முகத்தில் படர்ந்திருந்த வெறுப்பையும், கோபத்தையும் TV காமிராக்கள் பதிவு செய்தன.

தான் விடுதலை அடைந்த தருணத்தில் நிகழ்ந்ததை, பல ஆண்டுகள் கழித்து, மண்டேலா அவர்களும், அமெரிக்க அரசுத் தலைவர் பில் கிளின்டன் அவர்களும் சந்தித்தபோது பேசிக்கொண்டனர். அச்சந்திப்பில், கிளின்டன், மண்டேலா அவர்களிடம், "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று ஆரம்பித்தார். பின்னர், தன் மனதில் இருந்த ஓர் எண்ணத்தைத் தயக்கத்துடன் கூறினார்: "நீங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, அந்த முகத்தில் தெரிந்த கோபம், வெறுப்பு இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று கிளின்டன் தயங்கித் தயங்கிப் பேசினார்.

அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், அவருக்குப் பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எல்லாம் எங்கிருந்து வந்தன என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இருவேறு திசைகளில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்துவிட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலை செய்யப்பட்டனர். இப்போது இவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ, இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப் போகும் உலகில் உனக்கென ஒன்றும் இல்லை' என்று எனக்குள் எழுந்த இச்சிந்தனைகள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டன. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது: 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே' என்று அந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது" என்று மண்டேலா அவர்கள் பதிலளித்தார். - Tony Campolo “Let Me Tell You a Story” (2000)

நெல்சன் மண்டேலா அவர்கள், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்ததால், தன் எஞ்சிய வாழ்நாட்களை, சுதந்திரமாக வாழமுடிந்தது. 2013ம் ஆண்டு, தனது 96வது வயதில் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த நெல்சன் மண்டேலா அவர்கள், உலகின் தலைசிறந்த ஒரு தலைவராக, மனிதராக வாழ்ந்தார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், அவர், தன் வாழ்நாளெல்லாம், வெறுப்பு என்ற சிறைக்குள் வெந்து போயிருப்பார். ஒரு மாமனிதர் என்று வரலாற்றில் தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

நாம் ஒவ்வொருவரும் முழுமையான மனிதர்களாக வளர, முக்கிய சக்தியாக விளங்குவது, மன்னிப்பு என்ற உணர்வு. நெல்சன் மண்டேலா அவர்களுக்கும், அருள்பணி பிரேம் அவர்களுக்கும் மன்னிப்பின் அவசியத்தை, உன்னதத்தை இறைமகன் இயேசு சொல்லித் தந்திருப்பார் என்பதை நாம் மனதார நம்பலாம். கல்வாரியில் இயேசு கூறிய "தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34) என்ற வார்த்தைகள் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் என்பதையும் நாம் நம்பலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.  என்ன படம் என்பது தேவையில்லை. ஏறத்தாழ எல்லாத் தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதை தான். சமுதாயத்தில் நடக்கும் பல தீமைகளை ஒழிக்க, தீமைகள் செய்யும் வில்லன்களைத் தீர்த்துக்கட்டும் ஹீரோ இந்தத் திரைப்படத்திலும் காட்டப்பட்டார். நமது நாயகர்கள், அண்மைக் காலங்களில் ஏதாவது ஒரு வசனத்தை, அல்லது, ஒரு செய்கையைத் திரைப்படம் முழுவதும் அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் கைத்தட்டலைப் பெறுவார்கள்.

அதேபோல், இத்திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார்; அடித்து நொறுக்குவார். அடிகளைத் தாங்க முடியாமல் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், "மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை." என்று சொல்வார். இப்படி சொல்லிவிட்டு, மன்னிப்பு கேட்ட வில்லன்களைத் தீர்த்துகட்டுவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும் ஒலிக்கும். நீதி, நியாயம் என்ற பெயரில் நம் திரைப்படங்களில் வன்முறைகளை சர்வ சாதாரணமாகச் செய்யும் நம் நாயகர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற வார்த்தை தங்கள் அகராதியிலேயே கிடையாது என்று ஒரு சில ஹீரோக்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.

இதற்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி, அன்று கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சிலுவையில் மரண போராட்டம் நடத்தி வந்த இயேசு, மன்னிப்பு தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், செயல் என்று நிரூபித்தார். தன்னை மூன்று நாட்களாய் பல வகையிலும் சித்ரவதை செய்தது போதாதென்று இன்னும் தன்னைச் சுற்றி நின்று, கேலி செய்து கொண்டிருந்த வீரர்களை, அவர்களைத் தூண்டிய அரசுத் தலைவர்களை, மதத் தலைவர்களை... அனைவரையும் மனதார மன்னித்தார் இயேசு. அவர்களை இறைவனும் மன்னித்து, அவர்களைக் காக்கவேண்டுமென வேண்டிக்கொண்டார். "தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34) என்று சொன்னார்.

இயேசு, தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மன்னிப்பைப் பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். நோயுற்றோரைக் குணமாக்கியபோது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன (மத். 9:2; மாற். 2:5; லூக். 5:20) என்று கூறி குணம் அளித்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை, தீர்ப்பிடாமல் மன்னித்து அனுப்பினார். (யோவான் 8) 'காணாமற்போன மகன்', (லூக்கா 15) 'மன்னிக்க மறுத்த பணியாள்' (மத்தேயு 18) போன்ற அற்புதமான உவமைகள் வழியே கடவுளின் நிபந்தனை அற்ற அன்பை, அதனால் விளையும் மன்னிப்பை அழகாகச் சொன்னார். மன்னிப்பைப் பற்றி இயேசு கூறிய ஒரு கருத்தை மட்டும் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? இந்தக் கேள்விக்கு இயேசு தரும் அற்புதமான பதிலைக் கேட்போம்:

மத்தேயு நற்செய்தி 18 21-22

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”

ஏழு முறை மன்னிக்கலாமா? இது கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது பதில். தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு சொல்லப்பட்டுள்ள எண்கள் கணக்கைத் தாண்டியவை. யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ள எண்கள். 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு ஏழு முறை மன்னிக்கலாமா? என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ நிறைவான ஒரு சாதனையைப் பற்றி தான் பேசிவிட்டதைப் போன்று அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி, எப்போதும் மன்னிக்கச் சொன்னார். அதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னார்.

இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்குக் கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு, "எழுபது தடவை ஏழுமுறை" என்று பேதுருவிடமும், நம்மிடமும் கூறுகிறார்.

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியதுபோல், கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களைப் பற்றி இத்தேடலின் துவக்கத்தில் நாம் சிந்தித்தோம். நெல்சன் மண்டேலா அவர்கள் வழங்கிய மன்னிப்பினால், இனவெறியில் மூழ்கியிருந்த தென்னாப்ரிக்க அரசு நலமடைந்ததா என்று நமக்குத் தெரியாது, ஆனால், மண்டேலா அவர்கள் முற்றிலும் நலம் பெற்றார் என்பதை இவ்வுலகம் புரிந்துகொண்டது.

நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு." அல்லது, ("மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். மன்னிப்புக்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதால் அல்ல; நீங்கள் அமைதிக்குத் தகுதியுள்ளவர் என்பதால், மன்னிப்பு வழங்குங்கள்.")

சிலுவையில் தொங்கியபடி இயேசு சொல்லித்தந்த அற்புதப் பாடங்களில் முதல் பாடம், மன்னிப்பு. மனித குடும்பம் இன்று அனுபவித்துவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். மன்னிப்பைப் பெறுவதற்கும், தருவதற்கும் நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், நாம் தற்போது பயணித்துவரும் தவக்காலம். இத்தருணத்தில், மன்னிப்பு என்ற மருந்தால் இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.