2015-02-24 15:01:00

கடுகு சிறுத்தாலும் - வளைந்து கொடுக்கும் நாணல் வாழும்...


பாங்கேயி என்ற குருவின் உரையைக் கேட்பதற்கு வரும் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போனது. இதைக் கண்ட நீச்சிரன் என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. குரு பாங்கேயி அவர்கள் போதித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய புகழைக் கெடுக்கும் நோக்கத்தில், நீச்சிரன் அவர்கள் அங்கு வந்து உரத்தக் குரலில், "ஏய், குருவே, உன்னிடம் வருபவர் எவரும் நீ சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடு, பார்ப்போம்" என்றார். குரு பாங்கேயி அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்" என்றார்.

நீச்சிரன் அவர் அருகில் சென்றார். குரு பாங்கேயி புன்முறுவலுடன் அவரிடம், "என் இடது பக்கமாய் வாருங்கள்" என்றார். நீச்சிரன் அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப்பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்" என்றார் குரு பாங்கெயி. நீச்சிரனும் அப்படியே செய்தார். அப்போது, பாங்கேயி அவரிடம், "பார்த்தீர்களா? நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் உன்னதமானவர். இப்போது அமரவும், நாம் பேசுவோம்." என்றார்.

வெள்ளம் வரும்போது, வளைந்து கொடுக்கும் நாணல், நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரம், வேரோடு, வெள்ளத்தோடு போய்விடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.