2015-02-24 15:40:00

2020க்குள் மறுமுறை பயன்படுத்த முடியாத “ஸ்மார்ட்” ஊசிகள்


பிப்.24,2015. பாதுகாப்பற்ற ஊசிகளால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை உயிர்க்கொல்லி நோய்த் தொற்றுகளிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தில், ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாத “ஸ்மார்ட்” ஊசிகளை 2020ம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் பயன்படுத்த வேண்டுமென்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் இத்திங்களன்று வலியுறுத்தியுள்ளது.

எய்ட்ஸ் நோய்க்குக் காரணாகும் HIV கிருமிகள், hepatitis மற்றும் பிற நோய்களிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றுவதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட  “ஸ்மார்ட்” ஊசிகள் மிகவும் முக்கியம் என, WHO நிறுவனத்தின் HIV/AIDS துறைப் பிரிவின் இயக்குனர் மருத்துவர் Gottfried Hirnschall கூறினார்.

WHO நிறுவனத்தின் உதவியுடன் 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, பாதுகாப்பற்ற ஊசிகளால், 2010ம் ஆண்டில் 17 இலட்சம் பேர் வரை hepatitis B நோய்க் கிருமிகளாலும், 3 இலட்சத்து 15 ஆயிரம் பேர்வரை hepatitis C நோய்க் கிருமிகளாலும், ஏறக்குறைய 33 ஆயிரத்து 800 பேர் HIV நோய்க் கிருமிகளாலும் தாக்கப்பட்டனர் எனத் தெரியவந்துள்ளது.

WHO நிறுவனம் பரிந்துரைத்துள்ள, சதையில் அல்லது தோளில் போடப் பயன்படுத்தப்படும் புதிய “ஸ்மார்ட்” ஊசிகள், மறுமுறையும் பயன்படுத்துவதற்கு உதவாதவையாகும். 

கம்போடியாவில் அழுக்கான ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால், அங்கு பலருக்கு எச்.ஐ.வி, மற்றும் ஈரல் தொற்றுநோய் கணிசமாகப் பரவியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.