2015-02-23 15:11:00

வாரம் ஓர் அலசல் – துன்பங்கள் சுமையல்ல, சுகமானவை


பிப்.23,2015. தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா..? வாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா...? விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும், கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?, உரிமை இழந்தோம், உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா...? உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா...? அன்பு நெஞ்சங்களே, கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் நடந்த புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 4ன் இறுதிப் போட்டியில் இந்தத் திரைப்பட பாடல்வரிகளை இலங்கைச் சிறுமி ஜெசிக்கா உருகிப் பாடியபோது அந்த அரங்கத்தில் பலர் தங்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். இனச் சண்டையால் துன்புற்றுள்ள ஈழத்து மக்களுக்கும் அந்தப் பாடல் வரிகளுக்கும் உள்ள தொடர்பே பார்வையாளர்களின் இந்த உருக்கத்துக்குக் காரணம் என்று சொல்லலாம். துன்பங்களையும், தோல்விகளையும் கண்டு துவண்டுவிடாமல் வெற்றி வாழ்வை நோக்கி வீரநடை போட இப்படிப்பட்ட வரிகள் பலருக்கு உந்து சக்தியாக உள்ளன. வாழ்வில் நாம் வளரவும், வாழ்வை புதிய கண்ணோட்டத்தோடு நோக்கவும், துன்பங்கள் சுமையல்ல, அவை சுகமானவை என்பதைப் புரிந்து கொள்ளவும் இத்தகைய வரிகள் நமக்கு உதவுகின்றன. விதைக்கு, தன்மீது விழும் மண் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கின்றது. அதேபோல் பாறைகளில் அங்குமிங்கும் இடிபடும் ஓடைகளுக்கு அது சுகமாகவே இருக்கின்றது. இல்லாவிட்டால் சலசலவென்ற இன்னிசை முழக்கம் ஏது? விதைகள் விருட்சமாவது எப்போது? இனிய நெஞ்சங்களே, வாழ்வில் துன்பங்களும், தோல்விகளும் நிலையானவை அல்ல. அவை சுகமான வெற்றிக்கு வழி காட்டுபவை.

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் விடுதலை, அவர் டெல்லி வந்து சேர்ந்தார் என்ற தலைப்புச் செய்தியை இஞ்ஞாயிறு மாலையில் இணையச் செய்தியில் வாசித்ததும் இந்தச் சிந்தனையே முதலில் எழுந்தது.

துன்பங்கள் சுமையல்ல, அவை சுகமானவையே.

47 வயதான தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாநிலத்தில் தலிபான்களால் கடத்தப்பட்டார். முஸ்லிம் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறவர்கள் கொலை செய்யப்படும் செய்திகளை இந்நாள்களில் அடிக்கடி வாசிக்கும் போதெல்லாம், அருள்பணி பிரேம் குமார் அவர்கள் பற்றி ஒரு தகவலுமே இல்லையே என்று கவலைப்பட்டதுண்டு. கடந்த எட்டு மாதங்களாக எந்தத் தகவலுமே இல்லாமல் இருந்த நிலையில், அவர் விடுதலையாகி டெல்லி வந்து சேர்ந்தார்; பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்; அருள்பணி பிரேம் குமார் அவர்களும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்; மகனின் நிலை குறித்து கவலையடைந்திருந்த அவரின் தந்தையும், தனது மகனை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார் போன்ற வரிகள் நமக்கு உண்மையிலே மகிழ்வைத் தந்தன.

அருள்பணி பிரேம்குமார் அவர்களைக் கண்ட மகிழ்வில், அவரின் பாதுகாப்பான மீடபுக்காக உழைத்த அரசு அதிகாரிகள் உட்பட அனைவரின் துன்பங்களும் இன்று சுகமானவைகளாக மாறிவிட்டன. இவர், கடந்த எட்டு மாதங்களும் தன்னைக் கடத்தியவர்கள் மத்தியில் எப்படி வாழ்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஓர் உண்மை மட்டும் நமக்குப் பரிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு, தமிழகத்திலும், பிற நாடுகளிலும் பணிபுரிந்துவந்த இயேசு சபை அருள்பணி பிரேம்குமார் அவர்கள், ஆப்கானிஸ்தானில் இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் தலைவராக, அம்மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக, கடினமான ஒரு சூழலில் உழைத்து வந்தவர். அந்நிய நாட்டில், தெரியாத மக்கள் மத்தியில் பணி செய்த இவர், தான் கடத்தப்பட்ட நாள்களில் நிறையத்  துன்பங்களை எதிர்கொண்டிருப்பார். ஆனால் அவரின் அத்துன்ப நாள்களில், செபம், விடுதலை செய்வதற்குரிய பேச்சு வார்த்தைகள் என பல்வேறு செயல்களால் அவரோடு பலர் துணை நின்றார்கள். தனது விடுதலைக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும், தன்மீது அன்புசெலுத்தி பலர் செய்த செப தப செயல்கள் பற்றியெல்லாம் வரவிருக்கும் நாள்களில் அறிய வரும்போது இவர் அனுபவித்த துன்பங்கள் சுமையாகத் தெரியாது, ஆனால் சுகமாகத் தெரியும் என்றே எமக்குத் தோன்றுகிறது.

நோய், கடன்தொல்லை, தொழிலில் சரிவு, பணியிடத்தில் தொல்லை... இப்படி குடும்பங்களில் தினமும் ஒரு பிரச்சனை என்று நம்மில் பலர் வேதனைப்படுகிறோம். பிறரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் வாழ இயலாதபோது, நாம் செய்யவிரும்பியதை செய்ய இயலாதபோது.. அதிலும், அடுத்த வீட்டுக்காரர் ஓஹோ என சீரும் சிறப்புடன்  வாழ்வதாகத் தெரியும்போது நமது துன்பம் அதிகரிக்கின்றது. அச்சமயத்தில் வாழ்வில் வெறுமையும் விரக்தியும் ஏற்படுகின்றன. கடவுளையும் நொந்து கொள்கிறோம். ஆனால் நாம் எதை நம்புகிறோமோ அதையே பெறுகிறோம் என்ற உண்மையை அந்நேரங்களில் மறந்து விடுகின்றோம். நடப்பது எல்லாமே நமது நன்மைக்கே என்பதையும், நாம் உயர்ந்த இலட்சியத்தை நோக்கிச் செல்வதற்கே இப்படி நடக்கின்றது என்பதையும் நம்பும் எண்ணத்திலிருந்து திசை திரும்பி விடுகிறோம். துன்பங்கள் எப்பொழுதுமே வெற்றியை நோக்கி நம்மை நடத்திச் செல்லும் படிக்கட்டுகளாகவும், பாதையாகவுமே அமைந்திருக்கின்றன. துன்பங்கள், நமக்குள்ளே ஆழமாகச் சென்று, நமக்குள் புதைந்து கிடக்கும் சக்தியையும், நம் பண்புகளையும் வளர்ப்பதற்குத் உதவுகின்றன. வாழ்க்கை வெற்றி பெறுவதற்கே என்பதை துன்பங்கள் உணர்த்தி நிற்கின்றன.

ஆப்ரிக்க நாடாகிய காங்கோ குடியரசில் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டை, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக முடிவுற்றது. அந்நாட்டில் இடம்பெற்ற நீண்டகாலச் சண்டையில் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அதிகமான இரத்தம் சிந்தலை ஏற்படுத்திய சண்டை அது எனச் சொல்லப்படுகின்றது. அந்நாட்டில் போர் முடிவுற்றிருந்தாலும், வன்முறை முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது ஏனெனில் காங்கோ குடியரசில் குவிந்து கிடக்கும் இயற்கை வளங்களுக்காக, அந்நாட்டில் வன்முறை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. ஊழல் ஒரு தொற்று நோயாக உள்ள இந்நாடு, உலகில் ஊழல் மிகுந்துள்ள நாடுகளில் 23வது நாடாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டில் 2007ம் ஆண்டில் Floribert Bwana Chui என்ற இளைஞர் கொல்லப்பட்டார். ஊழலைப் புறக்கணித்தார், இலஞ்சங்கள் வாங்க மறுத்தார் என்பதே இந்த இளைஞர் செய்த பெரும் குற்றம் என்று Francesco de Palma என்ற எழுத்தாளர், “சுத்தமான கைகளுக்குக் கிடைத்த பரிசு”(Il prezo de due mani pulite)என்ற தனது நூலில் எழுதியுள்ளார். 25 வயது இளைஞர் Floribert, பணம்தான் எல்லாம் என்ற சர்வாதிகாரப்போக்கை எதிர்த்தார், தீமையைத் துணிச்சலுடன் எதிர்த்து ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்று கூறுகிறார் தெ பால்மா. உணவுப்பொருள்களைப் பரிசோதனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்த இந்த இளைஞர் ஒருநாள், பார்சலில் வந்த அழுகிப்போன உணவுப்பொட்டலத்தை ஏற்க மறுத்தார். இதனைக் கண்டுகொள்ளாமல் விடுமாறு அதிகாரிகள் இலஞ்சம் கொடுத்தனர். அதை ஏற்க மறுத்தார் இளைஞர். எனவே ஒரு சனிக்கிழமை பிற்பகலில் அவரைக் கடத்திச் சென்று ஞாயிறு இரவில் கொன்று போட்டனர். தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் அதிகமாகியபோது ஒருநாள் விவிலியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு Floribert சொன்னார் - மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயலைச் செய்வதைவிட இறப்பது மேல் என்று.

நீதிக்காகத் தனது உயிரைக் கையளித்த இந்த இளைஞர் Floribertக்குத் துன்பங்கள் சுகமாகத் தெரிந்தன. ஏனெனில் அவரின் இலட்சியம் உயர்ந்ததாக இருந்தது. இந்த இளைஞருக்கு நல்லவர்கள் காட்டிய ஆதரவும், வேத நூல்கள் தந்த துணிச்சலும் துன்பங்களைச் சுகமாகக் காட்டின. எனவே, துன்பங்கள் வழியாகத்தான் வெற்றி பெற முடியும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, முயற்சி என்ற முதலீட்டை, வாழ்வு என்ற வங்கியில் சேர்ப்போம். அப்போது துன்பங்கள், வாழ்வின் ஏணிப்படிகளாக மாறி எல்லா நிகழ்வுகளுமே சுகங்களாகத் தெரியும்.

எனக்கு எல்லாம் இருந்தால்தான் எதையும் என்னால் செய்ய முடியும் என்று நினைப்பது சாதாரணத்தனம். எனக்கு எதுவும் இல்லாவிட்டாலும் எதையும் என்னால் செய்ய முடியும் என்று நினைப்பது சாதனைத்தனம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அன்பு நேயர்களே, இதை நீங்கள், உங்கள் வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தால் உங்கள் வாழ்வின் அகராதியே மாறிவிடும். எனக்கு அது இருக்க வேண்டும், இது இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் என்னால் ஆப்கானிஸ்தான் சென்று பணி செய்வேன் என்று அருள்பணி பிரேம் குமார் சொல்லியிருந்தால் அவர் இன்று எங்கோ ஒரு மூலையில் அப்படியும் இப்படியும் என வாழ்ந்துகொண்டிருப்பார். அவருக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என, பல அரசு அதிகாரிகளாலும் மற்றவராலும் போற்றப்படுகின்றார் என்றால் அதற்குக் காரணம் என்ன? சும்மா வாழ்வதல்ல வாழ்வு, ஆனால் அந்த  வாழ்வை வலியோடு வாழ்வதிலே சுகம் என்று உணர்ந்து புது வழியில் துணிந்து அவர் இறங்கினார். அன்பர்களே, வாழ்வில் சுகங்கள் தேவையா, அப்படியானால் துன்பங்களைத் துணிவோடு சுமக்கப் பழக வேண்டும். அதில் கிடைப்பதுதான் உண்மையான சுகம். நம் வாழ்வு பிறரை வியக்க வைக்க வேண்டுமெனில், நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் பிறரை வியக்க வைக்க வேண்டும். வலிகளின் மத்தியில் எதிர்நீச்சல்போட்டு தலைஉயர்த்தி நிற்பவர்தானே சாதனையாளர். துன்பங்களைச் சுமக்கும் துணிச்சல்தானே சாதனையாளரை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இறப்பில் முடிவதல்ல, சிறப்பில் மலர்ந்து காட்டுவதுதானே வாழ்க்கை. வாழ்ந்து காட்டுவோமா... எப்படி... துன்பங்கள் சுமையல்ல சுகமானவை என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.