2015-02-23 15:51:00

தீயவனுக்கு எதிரான இயேசுவின் வெற்றியை காப்பது நமது கடமை


பிப்.23,2015. நம் வாழ்வில் நாம் ஆன்மீகப் பாலைவனங்களைச் சந்திக்கிறோம் என்பதையும், அவற்றை எதிர்கொள்ள உறுதியையும் விவிலிய உதவிகளையும் கைக்கொள்ளவேண்டும் என்பதையும் நினைவுறுத்தும் காலமாக 40 நாள் தவக்காலம் உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறாகிய இஞ்ஞாயிறன்று, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை, இயேசு, பாலைவனத்தில் செலவிட்ட 40 நாட்கள் பற்றி கூறும் இஞ்ஞாயிறு விவிலிய வாசகம் குறித்து எடுத்துரைத்தார்,.

பாலைவனத்தில் தீயோனுக்கு எதிரான போராட்டத்தில் கண்ட வெற்றியில் நாமும் பங்குபெறுகிறோம், அந்த வெற்றியைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்பில் நம் பார்வையை நிலைநிறுத்தி, தீய சக்திகளுக்கு எதிரான நம் போராட்டத்தை இந்த தவக்காலத்தில் மேற்கொள்கிறோம், ஏனெனில் தீமைக்கும், பாவத்திற்கும், மரணத்திற்கும் எதிரான வெற்றியே உயிர்ப்பு எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமையை எதிர்கொள்ளும்போது, இறைவனின் குரலுக்கு செவிமடுப்பது நமக்கு உதவும் என்பதால், விவிலியத்தை அடிக்கடி வாசிப்போம் எனவும் கேட்டுக்கொணடார்.

இந்த மூவேளை செப உரையின் இறுதியில், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, 'இதயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சிறு புத்தகம் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.